மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன முன்னணி முன்னிலையில்

இதுவரை கிடைத்த தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது.


அதன் அடிப்படையில் காலி மாவட்டத்தின் அம்பலங்கொட நகர சபையை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கைப்பற்றியுள்ளது.

இந்த நகர சபைக்கான வாக்கெடுப்பில் 6698 வாக்குகளைப் பெற்ற, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 10 ஆசனங்களை தன்வசப்படுத்தியது.

4260 வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி 6 ஆசனங்களை கைப்பற்றியது.

அம்பலாங்கொடை நகர சபையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 3 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணிக்கு 2 ஆசனங்களும் கிடைத்துள்ளன.

இதேவேளை காலி ரத்கம பிரதேச சபையிலும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிவாகை சூடியது.

இந்த பிரதேச சபையில் பொதுஜன பெரமுன 52 வீத வாக்குகளைப் பெற்றதுடன் ஐக்கிய தேசியக் கட்சி 22வீதமான வாக்குகளை மாத்திரமே பெற்றது.

பலப்பிட்டிய பிரதேச சபை, கரன்தெனிய பிரதேச சபை, போபே பிரதேச சபை, பெந்தொட்ட பிரதேச சபை ஆகியவற்றில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிவாகை சூடியது.

மாத்தறை மாவட்டத்தின் கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபையின் அதிகாரமும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வசமானது.

இந்த பிரதேச சபையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 7 ஆசனங்களை கைப்பற்றி அமோக வெற்றியீட்டியது.

கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 3 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இந்த பிரதேச சபையில் ஒரு ஆசனத்தை தன்வசப்படுத்தியது.

இந்த பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் திருத்தப்பட்ட முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா 7 ஆசனங்களைப் பெற்று சமநிலையில் உள்ளன.

இந்த நகர சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கு தலா 2 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலைப் பெற்றுள்ளது.

லுனுகம்வெஹெர பிரதேச சபையும் பொதுஜன பெரமுன வசமானது.

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரதேச சபை,தனமல்வில பிரதேச சபை ஆகியவற்றையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியது.

புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்திவில்லு பிரதேச சபையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வசமானது.