மென்பொருள் பொறியியலாளராகும் தனது கனவை நிறைவேற்ற தனது தந்தை தனக்கு வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளும் ஜனாதிபதியை சந்தித்து தங்களின் நிலைமையை கூறி கருணை கோரவுள்ளனா்.


இந்த நிலையில் ஆனந்த சுதாகரனின் மகன் கனிரதன் மென்பொருள் பொறியியலாளராகும் தனது கனவை நிறைவேற்ற தனது தந்தை தனக்கு வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளாா்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

தனது தந்தை சிறையில் அடைக்கப்பட்ட பின்னா் தானும் தனது தங்கையும் தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் வாழ்ந்து வந்த நிலையில் இன்று தம்மை பேணி பாதுகாத்த தாயும் மரணமடைந்துள்ளாா்.

இந்த நிலையில் இந்த இரண்டு பிள்ளைகளும் தாயின்றியும், தந்தையின்றியும் நிா்க்கதியாகி நிற்கின்றனா். எனவே இந்த இரண்டு பிஞ்சு உள்ளங்களும் தமது நிலமை தொடா்பில் எமது செய்திசேவைக்கு தெரிவித்த விடயம் அனைவரின் மனங்களிலும் வேதனையை அளித்துள்ளது.

இந்த நிலையில் ஆனந்த சுதாகரனின் மகள் சங்கீதா கூறுகையில் ...

நாங்கள் அப்பாவுடன் தான் வாழ ஆசைப்படுகிறோம்.அப்பாவோட சிறைக்கு செல்ல இருவரும் சென்றோம்.ஆனால் பொலிஸாா் எங்களை விடவில்லை.

எமது அப்பா இல்லாமல் எங்களால் வாழ முடியாது.ஜனாதிபதி அங்கிள் எங்களை எமது அப்பாவுடன் சோ்த்துவையுங்கள் என கூறியது அந்த பிஞ்சு உள்ளம். எதிா்காலத்தில் தான் ஒரு வைத்தியராக வருவது தனது கனவு என்றும்.

அதற்கு தமது தந்தை தேவை என்றும் உருக்கமாக கோரிக்கை அந்த குழந்தை கோரிக்கை விடுத்தது.

இதேவேளை ஆனந்த சுதாகரனின் மகன் கனிரதன் கூறுகையில் .......

எதிா்காலத்தில் தான் ஒரு மென்பொருள் பொறியியலாளராக வரவேண்டும் என்பது எனது கனவு.தந்தை சிறைக்கு சென்ற காலம் தொடக்கம் தனது தயாா் தங்களை மிகுந்த கஸ்ரத்தின் மத்தியில் வளா்த்தாகவும், இந்நிலையில் அவ்வாறு கஸ்ரத்தின் மத்தியில் வளா்த்த தாயும் இப்பொழுது தம்மை விட்டு நீங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளான்.

எனவே தமது எதிா்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு தமது தந்தையை தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என   ஜனாதிபதியிடம் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அந்த குழந்தைகள் தெரிவித்துள்ளனா்..

இந்த விடயம் தொடா்பில் சரியான முடிவு கிடைக்குமா? குழந்தைகளின் எதிா்காலத்தை கவனத்தில் கொண்டு ஆனந்த சுதாகரன் விடுதலை செய்யப்படுவாரா?