Monday, March 12, 2018

களுவாஞ்சிகுடியில் கலாபூசணம் தம்பிப்பிள்ளையின் நூல்கள்; வெளியீட்டுவிழா ஒரு பார்வை

ads


                                         (ரவிப்ரியா)
களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் தென்றல் சஞ்சிகை ஆசிரியர் க.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற கலாபூசணம் கலைச் செம்மல் மு.தம்பிப்பிள்ளையின்; நாவல் மற்றும் சிறுகதை தொகுதி வெளியீட்டு விழா சனியன்று (10) நடைபெற்ற போது பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் மற்றும்,சிறப்பு அதிதியாக பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், சிரேஷ்ட சட்டத்தரணி த.சிவநாதன் பட்டிருப்பு கல்விவலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி கி.ஜெயந்திமாலா விசேட அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் க.மதிசீலன் முன்னாள் காதிக் நீதிபதி தேசமானிய எம்.எம்.மவ்றூப்கரீம், மற்றும் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் அகியோர்  கலந்து சிறப்பித்தனர்.


கௌரவ அதிதிகளாக குருமண்வெளி  சித்திவிநாயகர் தேவஸ்தான தலைவர் ந.திருச்செல்வம். களுவாஞ்சிகுடி கிராமத் தலைவர் அ.கந்தவேள், குறுமன்வெளி பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளர் செல்வரவீந்திரன், குருமண்வெளி சிக்கன கூட்டுறவுச் சங்க தலைவர் க.நாகேந்திரன், மற்றும் மகிழூர் முன்னாள் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஆ.கெங்காசலம் ஆகியோர் கலந்து கொண்டனர். நூலின் முதல் பிரதியைப் பெறும் அதிதியாக சைவப் புரவலரும், மட்டக்களப்பு தமிழ்ச்சங்க பொருளாளருமான வி.ரஞ்சிதமூர்த்தி கலந்து கொண்டார்.

நிகழ்வு ஒரு மணித்தியாலம் தாமதத்துடன் ஒரு வகுப்பறை மாணவர்களுக்குச் சமமான பார்வையாளர்களுடன் (அதிதிகள், மற்றும் அன்னாரின் உறவினர்கள்; உட்பட) ஆரம்பமானது நிகழ்வுக்கான அபத்தமாகவே இருந்தது.

மண்டபம் முழுக்க பதினெட்டு வயது இளைஞர்போல் உற்சாகமாக ஓடி ஒடி நிகழ்வை நெறிப்படுத்திக் கொண்டிருந்த இந்த 80 வயதை எட்டியுள்ள நூலாசிரியருக்கு எட்டுத் திக்கும்; இருந்து எண்ணிலடங்கா பார்வையாளர்கள் மண்டபத்தை நிறைத்திருக்க வேண்டும் என்ற எமது எதிர்பார்ப்பு ஏன் ஏமாற்றமானது?
கலாபூசணம் விருது பெற்று. பல உயர்பதவி வகிக்கும் மாணவர்களை சுமார் 36 வருடங்களாக களைப்பின்றி கரைசேர்த்த புகழ்பெற்ற ஆசிரியருக்கு கலைஞருக்கு இளைஞர் சமூகம் ஏன் இருட்டடிப்புச் செய்தது என்ற வினாவை பிரதம விருந்தினரான பிரதேச செயலாளரும், சிரேஷ்ட சட்டத்தரணி த.சிவநாதனும் தமதுரைகளில் ஆதங்கம் மேலிட கோடிட்டு காட்டியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தென்றல்; சஞ்சிகை கணிசமான சந்தாதாரர்களை தன்னகத்தே கொண்டு கடந்த 10 வருடங்களாக மட்டக்களப்பில் நிலைபெற்றுள்ளது. எனினும் தென்றல் அபிமானிகளில் வாசகர்களில்;, சந்தாதாரர்களில் நூறுபேரையாவது ஏன் அவர்களால் கொண்டுவர முடியாமல் போனது?  ஐயாவின் சுயமுயற்சியை தென்றலின் பெருமைக்காக வெளியிட முன் வந்த தென்றல் அமைப்பு ஐயாவின் பெருமையை வெளிப்படுத்த ஏன் மண்டபத்தை நிரப்ப முயற்சிக்கவில்லை என்ற கேள்வியும் எழவே செய்கின்றது.

அதேபோல பிரதேச எழுத்தாளர்களின்; பிரசன்னமும் மிகக் குறைவாகவே இருந்தது. மங்கல விளக்கேற்ற எழுத்தாளர் சார்பில் ஒருவர் அழைக்கப்பட்டபோதும் அது உடன் நிறைவேறவில்லை. எழுத்தாளர் தட்டுப்பாட்டை அது பறைசாற்றியது. அவகாசம் கொடுத்து இரண்டாவது தடவை அழைத்தபோதுதான் கலாபூசணம் அரசரெத்தினம் ஐயா அழைக்கப்பட்டு வந்து அதைச் சாத்தியமாக்கினார்கள்.

குறுமன்வெளி கிராமம் இலக்கித்துறையில் உலக அரங்கில் இலக்கிய திறமையை நிரூபித்த எழுத்தாளர் அருள் செல்வநாயகம்; பிறந்த மண்.. இன்று பிரதிக் கல்விப் பணிப்பாளராக அவரது வாரிசு ஜெயந்திமாலா வாழும் பிரதேசம். கலைகலாசாரம் மொழிப்பற்று பாரம்பரிய கலைகள் ஆகியவற்றில் முன்னிலை வகிக்கும் கிராமங்களில் முதன்மை பெறும் முது பெரும் கிராமம். அங்கு பல சிறந்த அமைப்புக்களும் இருக்கின்றன. சிறப்பாக இயங்குகின்றன.

எனவே ஐயா இந்த வெளியீட்டை தனது சொந்தக்கிராமமான குறுமண்வெளியல் அங்கிருக்கும் ஏதாவது அமைப்பின் மூலம் நடாத்தியிருந்தால்   ; (குறுமண்வெளி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கம் போன்ற சமூக அக்கறையுடன் செயற்படும் அமைப்பின் மூலம்) அவர்களின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டாலே மண்டபம் காணாமல் போய் இருக்கும்;. என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எமக்கான அழைப்பை ஐயா அவர்களே கைப்பட எழுதி தபாலில் சேர்த்து விட்டு தொலைபேசியில் தொடர்பேற்படுத்தி தெரிவித்தாh.; பின் தொலைபேசியில் மேலும் கிடைத்ததை உறுதி செய்து கொண்டார். நிகழ்வின் முதல் நாள் இரவும் நிகழ்வன்று காலையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறியவனான எனது வரவை உறுதிசெய்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார்.;
அந்த பண்பும் அன்பும். அவரின் அணுகுமுறையும், மற்றவர்களை வயது குறைந்தவர்களையும் மதிக்கும் சுபாவமும்,- அன்றைய தினம் வீட்டில் எனக்கு ஒரு அதிமுக்கியமான வேலை இருந்தும் அதை உதறிவிட்டு அவருக்கு உகந்த மரியாதை அளிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்ல நிகழ்வு நிறைவுற்ற அன்றிரவு 9மணிக்குப் பின்னர் தொலைபேசி அலறியது. தொடர்பில் ஐயாதான். உளப்பூர்வமாக கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்தார்.
மண்டபத்தில் கூட எத்தனை தடவை ஒடிவந்து சந்தித்து வரவுக்கான மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் என்பதை நினைக்க உள்ளம் பூரித்துப் போனது.   அவரின் முகாமைத்துவ பண்பு என்னை அசத்தவே செய்தது. அவரின் கல்வி முகாமைத்துவம், அர்ப்பணிப்பு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி வியந்தேன்.. அதிதிகள் அவர் பற்றி மேடையில்  வழங்கிய  அவரின் கல்வி புல தகவல்கள் அதை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இதை இங்கு ஏன் நான் குறிப்பிட முனைந்தேன் என்றால் பின்பற்றக் கூடிய அரிய பண்புகள் நிறைந்த  முன்மாதிரியான ஒரு இலக்கியவாதியை, கல்விப்புல  மகானைப்பற்றி, வயது தாண்டிய அவரின் சுறுசுறுப்பு பற்றி மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய ஊடக கடமை எனக்குள்ளது என்பதை உணர்ந்ததால்தான். அவரது இந்த அரிய அடிப்படை நற்பண்புகளை ஏன் நாமும் பின்பற்றக் கூடாது?
ஊடகவியலாளர்களை நிகழ்வு நடக்கும்போதோ அல்லது நிறைவு பெற்றபின்னரோ பொதுவாக யாரும் கணக்கில் எடுப்பதில்லை என்ற குறைபாடு இருக்கவே செய்கின்றது. தொடர்பு கொண்டாலும் ஏன் செய்தி வரவில்லை. ஏன் இன்னும் போடவில்லையா?  என்ற அதிகார தோரணைதான் இருக்கும். அதை ஐயாவின் பண்பு அடித்து நொறுக்கியுள்ளதாகவே உணர்கின்றேன்.
அத்தகைய நல்ல ஒரு தகுதியான மனிதப் பண்பாளனுக்கு முதுவயதில் இருக்கும் அவருக்கு கூடிய கூட்டம் போதாது என்ற அதிர்வில் இருந்து இன்னமும் என்னால் விடுபட முடியாதிருக்கின்றது.

ஏற்பாட்டாளர்களும், ஒழுங்கமைப்பாளர்களும் அழைப்பிதழ்களை பிரதேச இலக்கிய அமைப்புக்களுக்கு. சமூக அமைப்புகளுக்கு வாசகர் வட்டங்களுக்கு, சங்கங்களுக்கு, முதியோர் சங்கங்களுக்கு, பிரதேச எழுத்தாளர்களுக்கு முறையாக முழுமையாக அனுப்பியிருந்தால். ஐயா பாணியில் உறுதிப்படுத்தியிருந்தால்; நிச்சயம் கூட்டம் சேர்ந்திருக்கும். 
ஐயா எல்லோருக்கும் வசதியான இடமாக களுவாஞ்சிகுடியை மத்தியஸ்தானமாக நினைத்து, சுலபமான போக்குவரத்து செய்யக் கூடிய இடம் பார்த்து நல்ல நோக்கோடு மிகுந்த எதிர்பார்ப்போடு செய்தது அவருக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கும்.
தமிழா நீ எப்போ விழிப்படைவாய்?  என்ற ஏக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. இலக்கியவாதிகளின் எழுச்சியில்தான் எமது கலை கலாசார பண்பாட்டுப் பாரம்பரியங்கள் இருப்பு கொள்கின்றன. அத்தகையோரின் ஆக்கங்களுக்கு உரிய கௌரவம் அளித்து உற்சாகப்படுத்த உடன்படும் போதுதான் சமூகம் உருப்படும் என்று மனது உறுத்த, நிகழ்வில் நினைவுகள் பதிகின்றன.

எண்ணிக்கை முக்கியமல்ல எண்ணங்கள்தான் முக்கியம் என்று எம்மை நாமே சாந்தப்படுத்திக்கொண்டு, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு அடையாளமாக சந்தோசம் பொங்க எளிமையாக ஒருவரையும் தவறாமல் ஒருவித பூரிப்புடன் தரிசனம் செய்து கொண்டிருந்த ஐயாவின் பண்பு எம்மை ஆட்கொள்ளுகின்றது. மண்டபம் நிறைந்திருந்தால் ஐயாவின் பாடு என்னவாகியிருக்கும்? என்று கேள்வி எழ, போதும் இந்த பார்வையாளர்கள் என்று உள் மனது சொன்னது.
சம்பிரதாய வரவேற்பு, மங்கல விளக்கேற்றல், தமிழ்தாய் வணக்கம் ஆகியவற்றுடன் நிகழ்வு ஆரம்பமானது.
ஆசியுரை வழங்கிய ஆச்சாரிய திலகம் சிவஸ்ரீ வ.யோகராசா தனது ஆசியுரையுடன் தமிழன் நிலை பற்றிய சில விடயங்களை அழுத்திக் கூறி தனது உணர்வுகளையும் வெளிப்படுத்தினார்.   
வரம்பு மீறாத வரவேற்புரையை கலாபூசணம் இ.கோபாலபிள்ளை அளவோடு அத்துமீறாமல் நிகழ்த்தி நேரத்தை சுருக்கிக் கொண்டார்.. தலைமையுரையும் இரத்தினச் சுருக்கமாக அறிக்கைபோல் இடம் பெற்றது. வாசிக்கப்பட்டது.
நூலாசிரியருக்கு அதிதிகள் அணிவகுத்து நின்று பொன்னாடை போர்த்தி பாராட்டுப்பத்திரம் வழங்கி ஆரம்பத்திலேயே கௌரவித்தது எம்மை மகிழ்சியின் உச்சத்திற்கு உயர்த்தியது. பொன்னாடை ஒன்றல்ல பல எனும்போது அது ஐயாவிற்கு நல்ல பொருத்தப்பாடுதான்.

நூல் வெளியீடு என்றால் முதற்பிரதி பெறுபவர் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி என்பது இலக்கிய உலகில் எழுதாத விதி. இதை ஒழுங்காக பேணி இலக்கியவாதிகளுக்கு பாரபட்சமின்றி ஒத்துழைக்கும்  அவர் கரங்களில் ஐயாவின்; முதற் பிரதிகள் முத்தமிட்டன.

தொடர்ந்து அதிகளின் கரங்களிலும், தொடர்ந்து அதிகளால் மற்றவர் கரங்களுக்கும் பிரதிகள் கைமாறின. இரு நூல்களின் பிரதிகளையும் ஒரே தடவையில் வழங்கியது நேரச் சிக்கனத்திற்கு வழி வகுத்தது.
சிறுகதைத் தொகுதிக்கான நயவுரையை நிகழ்த்த  பெயர் குறித்தவர் வருகை தராததால், அப் பொறுப்பு திடீரென கலாபூசணம் அரசரெத்தினம் ஐயாவிடம் ஒப்படைக்கப்பட அவரும் ஆயத்தமில்லாமல் சுருக்கமாக மேலோட்டமாகவே நயவுரையை நிகழ்த்திச் சென்றார்.

புதுமைப் பெண், மற்றும் சுதந்திரப் பறவைகள் ஆகிய இரு குறுநாவல்கள்  பற்றி நயவுரை நிகழ்த்த வந்த திறமைமிக்க இளம் இலக்கியவாதி; கவிஞர் ஆழிவேந்தன் ரமேஸ்குமார் தனது பேச்சுத் திறமை, மொழியாற்றலால் எம்மை கவர்ந்தாரே தவிர நயவுரையால் கவர தவறிவிட்டார் என்றே கருத வேண்டியிருக்கின்றது.
தனது நேரத்தை விடயத்திற்கு வெளியே சென்று நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதி பாணியில் தனது இனம் பற்றிய தற்போதைய  ஆதங்கங்களை கொட்டித் தீர்ப்பதில் அவர் கவனம் முற்றாக திசை திரும்பியதால் குறுநாவல்களுக்குள் அவர் குடிபுகாமல் வெளியில் நின்று பார்த்து நயத்தார் என்பது ஏற்புடையதாகவில்லை.
எனவே நயவுரைகள் அதிகம் எதிர்பார்த்திருந்த பார்வையாளர்களுக்கு திருப்தி தரவில்லை என்றே கூறலாம். பழரசம் பருக வந்தவர்களுக்கு பச்சைத் தண்ணி கொடுத்து சமாளித்தது போல் இருந்தது.

அதிதிகள் அனைவருமே இரத்தினசுருக்கமாக உரைகளை சுருக்கி நேரத்திற்கு மதிப்பளித்தார்கள். எனினும் விசேட அதிதியாகக் கொழும்பில் இருந்து சிக்கலான இந்த காலத்திலும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட (எம்மவர்களுக்கு எடுத்துக்காட்டாக) ஜனாப் எம்.எம்.மவ்றூப் கரீம் சற்று நேரமெடுத்து விசேட உரையாற்றினார்.
தமிழின் தொன்மைக்கான அடிப்படை, செம்மொழி அந்தஸ்து, தமிழ் முஸ்லிம் உறவு, கதாசிரியருடனான நெருக்கம், மத தொடர்புகள்  என்றெல்லாம் சுவைபட தெறித்தார்.( அவர் அரங்கில் இருந்தபோது தனது பழைய நண்பர்கள் பற்றியெல்லாம் ஆசையோடு கேட்டு அக மகிழ்ந்தது தமிழ் முஸ்லிம் உறவு இன்றும் இறுக்கமாகவே இருக்கின்றது என்பதற்குச் சான்று பகிர்ந்தது.)  அவர் உரை தமிழ் முஸ்லிம் உறவை மேம்படுத்துவதாக அமைந்தது நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்தது..

தற்போது நிகழ்வுகளில் வரவேற்பு நடனம் என்ற ஒன்று பண்பாட்டோடு இசைந்து இடம்பெறவது நிகழ்விற்கு மெருகூட்டுவது வழக்கம். அத்தகைய மெருகூட்டல் தென்றல்போல் பார்வையாளர்களை வசீகரிக்கவே செய்யும்.
ஆனால் தென்றல் நடாத்த, கலாசார உத்தியோகத்தர் ஒழுங்கமைத்த இந்த நிகழ்வில் இலக்கிய தென்றல் வீசவில்லை. மாறாக வெப்பக் காற்றுதான் மண்டபத்தில் வியாபித்திருந்தது என்பதே கலாரசிகர்களின் கருத்தாக இருந்தது.
எனினும் கம்பீரம் குறையாத கதாசிரியரை கண் குளிர பொன்னாடையுடன் கண்டு கொண்டதில் பெற்ற மனநிறைவு மட்டும் மகத்தானது. மறக்க முடியாதது. மலரின் வாசனை போன்றது. 
களுவாஞ்சிகுடியில் கலாபூசணம் தம்பிப்பிள்ளையின் நூல்கள்; வெளியீட்டுவிழா ஒரு பார்வை Rating: 4.5 Diposkan Oleh: Ravindramoorthy
 

Top