நாட்டு மக்கள் அனைவரும் சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் தோன்ற வேண்டும் - கி. துரைராசசிங்கம்


துவேசம் மெல்ல மெல்ல உடைத்தெறியப்பட்டு ஒவ்வொருவரதும், ஒவ்வொரு சமூகத்தினரதும் உரிமைகள் மதிக்கப்படும் அதே நேரத்தில் எல்லோரும் இந்த நாட்டு மக்கள், சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் தோன்ற வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

புத்தளம் ஆனமடுவவில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்திற்கு பாராமன்ற உறுப்பினர் மற்றும் அப்பகுதி மதத்தலைவர்கள், வர்த்தக சங்கத்தினர், பிரதேசவாசிகள் மேற்கொண்ட நல்லிணக்க விடயத்தினை வரவேற்கும் முகமாகவும் நாட்டில் ஏனைய பாகங்களிலும் இவ்வாறான மனிதநேய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்ற ரீதியிலும் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன, மத துவேசங்கள் என்பது இனங்களோடு சம்மந்தப்பட்ட விடயம் அல்ல. ஒவ்வொரு இன, மத, சமூகங்களைச் சேர்ந்த ஒரு சிலர் செய்கின்ற நடவடிக்கைகள் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. அந்தக் குழுக்கள் ஒரு நியாயமற்றவையாக இருந்த போதிலும் கூட அந்தந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களால் அவை தொடர்பில் கருத்தக்கள் கூறவோ, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ முனைவதில்லை. அவ்வாறு செய்தால் தமக்கு துரோகிப் பட்டம் கிடைக்கும் என்ற யதார்த்தத்திற்கு விதிவிலக்காக நடந்துகொள்ள முடியாதவர்களாகவே அவர்கள் இரக்கின்றார்கள். இது ஒரு பொது நியதியாக வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆனால், பெரும்பாலானவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத துவேசத்தின் அடிப்படையிலான செயல்கள் மேற்குறித்த காரணங்களால் அந்தந்த சமூகத்தின் உணர்வுகளாகக் கொள்ளப்பட்டு அந்தந்த சமூகங்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்திய போதிலும் கூட அந்த சமூக மட்டத்தில் அவை இன, மொழி, மதப்பற்றாகப் பேசப்படுகின்றது. அந்தவகையில் இவை தொடர்பான துவேசம் என்பது தன்பாட்டில் பிரபல்யம் அடைந்து அதனுடைய கைங்கரியத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றது.

இது ஒரு துரதிஷ்டமான நிலைமையாகும். இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே நமது நாட்டில் உண்மை, நீதி என்பன உணரப்பட்டு சமத்துவமான சமுதாயம் உருவாக முடியும். இதற்கு ஏற்ற புதிய வழிமுறைகளைக் கையாளும் செயற்பாடுகள் அவ்வப்போது எடுக்கப்பட்ட போதிலும், அவை பிரபல்யம் அடையவில்லை. அதனால் அடையக் கூடிய இலக்குகளையும் அடைய முடியவில்லை.

2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் துவேசம் தொடர்பான செயற்பாடுகளை வெளிப்படை நிலையில் இருந்து ஓரளவு தள்ளி வைத்தது என்றே கூறலாம். இருப்பினும் அண்மையில் அம்பாறை மற்றும் கண்டிப் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் துவேசம் தன்னுடைய உறங்கு நிலையைக் கலைத்து விட்டதோ என்கின்ற வினாவை எழுப்புகின்றது.

இதற்கு முன்னுரையாக வேறொரு பாங்கான துவேசச் செயற்பாடு தென்பகுதி மக்களை உசுப்பேற்றி தாமரை மொட்டின் வாக்குவங்கியாக வெளிப்பட்டது. அந்தச் செயற்பாடு இந்த நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட தமது விடுதலைக்காகத் தொடர்ச்சியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழினத்தின் மீதான அமைதி வழியிலான துவேச வெளிப்பாடு ஆகும். இதன் தொடருரையாக அம்பாறை, கண்டி விடயங்கள் இல்லாது விடினும் அடுத்த சிறுபான்மையையும் எச்சரிக்கும் வகையிலான செயற்பாடுகளேயாகும்.

வெறுமனே எல்லோரும் நிகழ்விடங்களுக்குச் சென்றும், அறிக்கை விட்டும், பாராளுமன்றில் விவாதம் நடத்தியும் மரபு ரீதியான செயற்பாடுகளையே செய்து கொண்டிருந்தார்கள். துவேசத்தைத் தூண்டியவர்கள் சில இடங்களில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டிருந்தாலும், அவை வெறும் படங்காட்டும் செயற்பாடுகளாகவே மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டன.

இந்த நிலையில் தான் நேற்று அல்லது நேற்று முன்தினம் என்று நினைக்கின்றேன். புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ என்ற பிரதேசத்தில் நிகழ்ந்திருக்கும் செயற்பாட்டின்பால் நீதி, அமைதி என்பவற்றை நேசிப்பவர்கள் தங்கள் கண்களைத் திருப்ப வேண்டும். குறித்த நாளன்று அதிகாலை 02.15 மணியளவில் முஸ்லீம் ஒருவருக்குச் சொந்தமான உணவகம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த நியாயபூர்வமாகச் சிந்திக்கக் கூடிய நபர்கள் மற்றும் மக்களின் செயற்பாடுகளில் பாராட்டுதலுக்கும், பின்பற்றதலும் உரிய பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, அப்பிரதேச வர்த்தக சமூகம், பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர், மதத்தலைவர்கள், பொலிஸார் என்போர் உடனடியாகச் செயற்பட்டு கடையைத் திருத்தி அதனைப் பழைய நிலைமைக்குக் கொணர்ந்து உணவகத்தை இயங்க வைத்திருக்கின்றார்கள். இது வெறும் சம்பவம் அல்ல மனிதத்துவத்தையும், நாட்டின் உண்மையான முன்னேற்றத்தையும் தங்கள் உள்ளத்தில் நிறைத்திருக்கும் அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கக்கூடிய ஒரு செயற்பாடாகும்.

தீமை, தீவிரவாதம் என்பவற்றைச் செயற்படுத்தும் மிகக் குறைந்த வீதத்தினரான தீவழிச்செல்வோரின் செயற்பாடுகள்; அவரவருடைய மதம், இனம், சமூகம் என்ற அடிப்படையிலே கரிபூசுகின்ற செயற்பாட்டினின்றும் விலகிக் கொள்ளவும், அத்தகையோரைத் தனிமைப்படுத்தவும், பலவீனப்படுத்தவும் இத்தகு செயற்பாடுகளுக்கு அவர்கள் முற்படாதிருக்கவும் ஆனமடுவவில் நடைபெற்ற இந்தச் செயற்பாடு போன்ற செயற்பாடுகள் வழிவகுக்கும்.

துவேசம் மெல்ல மெல்ல உடைத்தெறியப்பட்டு ஒவ்வொருவரதும், ஒவ்வொரு சமூகத்தினரதும் உரிமைகள் மதிக்கப்படும் அதே நேரத்தில் எல்லோரும் இந்த நாட்டு மக்கள், சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணத்தோடு அதற்கான செயற்பாடுகள் சிற்றளவிலாவது தொடங்கி வியாபிக்க முடியும்.

மேற்படி ஆனமடுவவில் நல்லிணக்கச் செயற்பாட்டில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகின்றோம். இதே போன்று ஏனையவர்களும் செயற்பட முற்படுவோம். நல்ல காரியங்கள் மூலம் தீமையை வலுவிலக்கச் செய்ய முடியும் என்பதற்கு இவ்வாறான செயற்பாடு ஒரு உதாரணமாக அமையும். நீதியையும், நியாயத்தையும், தர்மத்தையும் அதிக பெரும்பான்மையான மக்கள் மனதளவில் ஆதரித்த போதிலும் மௌனமாக செயற்படாத்தண்மையாக இருப்பதன் காரணமாகத் தான் தீமைகள் மேலோங்குகின்றன. தீயவர்களின் செயற்பாட்டால் முழு மக்கள் சமூகமும் கலங்கத்துக்கும், அவமதிப்புக்கும் ஆளாகுகின்றன. எனவே ஆனமடுவவில் இடம்பெற்ற வியடம் போன்ற நல்ல செயற்பாடுகள் நாட்டில் நடைபெறுவதற்கு இந்த நாட்டை நேசிக்கின்ற அனைத்து இன, மத. சமூகம் சார்ந்த மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.