சிங்கள மொழியறிவு இல்லாதக் காரணத்தால் பேஸ்புக் சீர்செய்ய காலதாமதம்!

பேஸ்புக் நிறுவனத்தில் சிங்கள் மொழி அறிவுடையவர்கள் குறைவாக உள்ளனர். இதனால் இலங்கையில் பேஸ்புக் நிறுவத்தின் முடக்கத்தினை சீரமைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதென பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சமூக வலைத்தளங்களின் தடையை விரைவாக நீக்குமாறு இலங்கை அரசாங்கம் பேஸ்புக் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அனுப்பியுள்ள பதில்மின்னஞ்சலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் தனது மின்னஞ்சலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“இலங்கையில் சமூக வலைத்தளங்களின் முடக்கத்தினை சீரமைப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது.
மேலும் பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள இனமுறுகலை ஏற்படுத்தக்கூடிய பதிவுகள் மற்றும் காணொளிகளை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள இருக்கின்றோம்” எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை பேஸ்புக் முடக்கம் தொடர்பில் அமெரிக்காவின் சீ.என்.பி.சி ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளதாவது,
பேஸ்புக்கில் வெளியிடப்படும் வெறுப்பூட்டும் கருத்துக்கள் மற்றும் பொய்யான கருத்துக்களை அமெரிக்க அரசாங்கத்தினாலேயே நீக்க முடியாதபோது இலங்கை அரசாங்கத்தினால் எவ்வாறு நீக்க முடியுமென குறித்த செய்தியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் பேஸ்புக்கில் இதற்கு முன்னரும் வெறுப்பூட்டும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவற்றை தடுக்க இலங்கை அரசாங்கம் முயற்சிக்கவில்லையெனவும் சீ.என்.பி.சி ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.