பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

நம்பிக்கையில்லா தீர்மான பிரேரணை ஒன்று நாடாளுமன்ற சபாநாயகர் கருசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 51 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்களும் அதில் கைச்சாத்திட்டுள்ளனர்.

பிரதமரின் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதியின் சுதந்திரக் கட்சியும் சேர்ந்துதான் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் இங்கு ஆட்சியை அமைத்துள்ளனர்.

இரு முன்னணிக் கட்சிகளும் ஆட்சியில் அங்கம் வகித்ததால், இங்கு எதிர்க்கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே செயற்பட்டு வருகிறது. ஆனாலும் ஆளும் கூட்டணியில் இருந்து பிரிந்த சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியாக கூட்டு எதிர்க்கட்சியாக செயற்படத்தொடங்கியிருந்தனர்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி தனியாக அவர்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியாக தனியாக போட்டியிட்டனர்.

ஆனால், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனாதிபதியின் சுதந்திரக் கட்சியைவிட அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பிடித்ததால், கூட்டு அரசாங்கத்தின் மீது அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியது.

அதனை அடுத்து உடனடியாக ஆட்சியை கலைத்துவிட்டு பொதுத்தேர்தலை நடத்துங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் கேட்கத் தொடங்கினார்.

பலத்தை நிரூபிக்க முடியவில்லை

ஆனாலும், அவர்களால் அப்போதைக்கு பலத்தை நிரூபிக்க முடியாததால், அவர்களால் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக்க முடியவில்லை.

இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து விலக்குவேன் என்று மஹிந்த ராஜபக்ஷ சூழுரைத்திருந்தார். "என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்து பாருங்கள்" என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

அதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தும் தமக்கு ஆதரவு கிடைத்திருப்பதாக பொதுஜன பெரமுனவினர் கூறிவந்தனர். இந்த நிலையிலேயே தற்போது இந்த நம்பிக்கையில்லா தீர்மான பிரேரணை வந்திருக்கிறது.

ஆகவே, இனிமேல் கொழும்பு அரசியல் மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சபாநாயகர் ஏற்றால்?

நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் விவாதத்துக்கு ஏற்றால், அப்போதுதான் நேரடியாக யாருக்கு என்ன ஆதரவு என்பது தெளிவாகும். ஆகவே நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறுமா, பிரதமர் பதவி விலக நேரிடுமா, அப்படி பதவி விலகினால் அடுத்து யார் ஆட்சி அமைப்பார் என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எது எப்படி இருந்த போதிலும், ஏற்கனவே உள்ளூராட்சி தேர்தலில் ஆட்சியமைக்க முடியாமல் பல சபைகள் தடுமாறுகின்ற இன்றைய நிலையில் நம்பிக்கையில்லா தீர்மான விவகாரமும் அரசியல் நெருக்கடியை இங்கு அதிகரிக்கச் செய்யப்போகின்றன.

மஹிந்த ராஜபக்‌ஷவே இதனை நேரடியாக சபாநாயகரிடம் கையளித்தார்