பிள்ளையானுக்கு எதிரான குற்றப்பத்திரிகை: 3ஆம் கட்ட விசாரணை ஆரம்பம்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) காலை முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில், பிள்ளையான் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பில், இன்று மூன்றாம் கட்டமாக இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டடார்.
குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம், இராணுவ புலனாய்வு உத்தியோகத்தரான எம்.கலீல் ஆகியோர் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின் பின்னர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிரகாரம் மூன்றாவது கட்டமாக இன்றைய தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.