வாகரைப் பிரதேசசபை உறுப்பினரது 20 இலட்சம் பெறுமதியான படகு மற்றும் வலைகள் தீக்கிரை..! TMVP கட்சியினரே காரணம்...?



மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினா; கதிர்காமத்தம்பி சந்திரமோகன் என்பவருக்குச் சொந்தமான கடல் மீன்பிடிப்படகு மற்றும் வலைகள் என்பன இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வாகரை பனிச்சங்கேணி கடற்கரையில் (14) அதிகாலையில் மேற்படி சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என அறியப்படுகின்றது. இது தொடர்பில் வாகரைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் க.சந்திரமேகன் கருத்துத் தெரிவிக்கையில்

அதிகாலை கடற்கரையில் எனது படகு மற்றும் வலைகள் எரிவதாக கிடைக்கப்பட்ட தகவலையடுத்து நான் அப்பகுதிக்குச் சென்றவேளை எனது படகு, வலைகள் முற்றுமுழுதாக தீக்கிரையாகி இருந்தது. இதன் பெறுமதி சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமாகும். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நான் போட்டியிட்டு வட்டாரத்தில் வெற்றி பெற்று தற்போது வாகரைப் பிரதேச சபையின் உறுப்பினராக இருக்கின்றேன்.

கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபையில் முதல் நாள் அமர்வில் தவிசாளர் தெரிவிற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் அவர்களுக்கு ஆதரவு தரும்படி என்னிடம் கோரினார்கள் அவர்கள் தவிசாளராகவும், முஸ்லீம் உறுப்பினர் ஒருவரை பிரதித் தவிசாளராகவும் நியமிப்பதற்கு இருந்தனர்.

அது எனக்குப் பிடிக்கவில்லை அத்துடன் எனது தலைமையின் கட்டளையின் பிரகாரம் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எனது ஆதரவை வழங்கினேன். அதன் பிற்பாடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் பல்வேறு விதத்தில் அச்சுறுத்தப்பட்டேன். அதன் விளைவாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என நான் சந்தேகப்படுகின்றேன்.

இது தொடர்பில் வாகரைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். இது தொடர்பான குற்றவாளியைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு எனது எரியுண்ட படகு மற்றும் வலைகளுக்கான நட்டஈட்டையும் பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும்  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்டணம் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

இவ் உறுப்பினர் தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் போட்டியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.