இன்று லண்டன் 25 ஆவது பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் மைத்திரி

25 ஆவது பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு லண்டனில் இன்று ஆரம்பமாக உள்ளது.

லண்டன் நேரப்படி முற்பகல் 10 மணிக்கு பக்கிங்காம் மாளிகையில் இந்த மாநாடு ஆரம்பமாகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 53 நாடுகளின் அரச தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாடு இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளதுடன், இரண்டாம் எலிசபத் மகாராணியினால், அரச தலைவர்களுக்கு வழங்கப்படும் இராப்போஷண விருந்து இன்று பிற்பகல் இடம்பெற உள்ளது.

மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு அங்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க செயலாளர் லியாம் பொக்ஸ் ஐ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுப் பிற்பகல் சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கைக்கு வழங்கப்படும் சலுகைகளை மேலும் அதிகரித்து இலங்கையில் பல நேரடி முதலீடுகளை மேற்கொள்ள பிரித்தானியா அரசாங்கம் தயாராகவுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினருமான பரோன் நெஸ்பி யையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த மட்டத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய செயற்பாடுகளின் உண்மை நிலை தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜெனிவாவுக்கும் தெளிவுபடுத்த தாம் தமது பூரண உதவியை வழங்குவதாகவும் பரோன் நெஸ்பி குறிப்பிட்டுள்ளார்.