70 வருடங்களாக சிறுபான்மை இன மக்களை ஏமாற்றும் சிங்கள அரசியல் தலைவர்கள்...!


(ஜெ.ஜெய்ஷிகன்)
நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து சிங்கள அரசியல் தலைவர்கள் சிறுபான்மை இன மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகின்றார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் தெரிவித்தார்.

வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா கழக மைதானத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-
மூன்று வருடங்களாக ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி எந்தவொரு உறுதி மொழியையும் நிறைவேற்றாத ஜனாதிபதியாகவே இருக்கின்றார். அரசியல் கைதியான ஆனந்தசுதாகரன் தனது மனைவியின் மரணச்சடங்கிற்கு சென்ற வேளை இரண்டு குழந்தைகள் கட்டி அனைத்து கதறியதையும், பெண் குழந்தை தகப்பனுடன் சிறைச்சாலைக்கு செல்வதற்கு பஸ்ஸில் ஏறுவதையும் நாங்கள் கண்ணுற்றோம்.

உலகத்திலே வாழும் அனைத்து தமிழ் மக்களும் கண்ணீர் விட்டு அழும் வேதனையாக இருந்தது. இரண்டு குழந்தைகளும் தங்களது பாட்டியுடன் ஜனாதிபதியை சந்தித்த போது சித்திரை புதுவருடத்திற்கு முன்பாக அவரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதாகக் கூறியும் அந்தக் குழந்தைகளையும் ஏமாற்றிய ஒரு ஜனாதிபதியாக நாங்கள் பார்க்கின்றோம்.

ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டை ஆண்டு கொண்டிருக்கும் சிங்கள பெரும்பான்மை கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறுபான்மை இன மக்களை இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஏமாற்றிக் கொண்டு வருகின்றார்கள் என்பதை மீண்டும் உணர வேண்டியதாக உள்ளது.

பதவிக்கு வரும் போது பல வாக்குறுதிகளை கொடுத்து வருவதும், பதவியில் அமர்ந்ததும் அடுத்த தேர்தலில் வெற்றிவாகை சூடலாம் என்று சிந்திப்பதுமாகவே நாட்டின் அரசியல் தலைவர்கள், நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்காகவே நாங்கள் போராடினோம். எமது உரிமைக்காக, எமக்கான ஒரு நாடு வேண்டும் என்று போராடினோம். அரசியல் ரீதியாக, ஆயுத ரீதியாக போராடினோம். ஆயுத போராட்டம் மௌனித்தாலும் நாங்கள் இன்றும் ஜனநாயக வழியில் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

எமது உரிமைகள் மறுக்கப்படுமாக இருந்தால் இந்த நாட்டின் இரண்டாம் தர பிரஜைகளாக பணிக்கப்பட்டுக் கொண்டிருந்தோமானால் ஜனநாயக போராட்டம் எந்த வடிவத்தில் உருமாறும், எதிர்கால சந்ததியினர் இந்த ஜனநாய போராட்டத்தில் எந்தவிதத்தில் கையில் எடுப்பார்கள் என்று கூட எமக்கு தெரியாமல் இருக்கின்றது.

தீர்வு என்று வரும் போது இந்த நாட்டிலே அரசியல் சம்பந்தமான விடயமும் எனக்கு நினைவிற்கு வருகின்றது. 2015.01.08க்கு முன்பு பத்து வருடங்களாக கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றது. தமிழ் பேசும் மக்களின் உதவியுடன் புரையோடிப்போயுள்ள எமது இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை கொண்டு வருவார் என்ற நம்பிக்கையில், கொண்டு வருவேன் என்று கூறியதற் கிணங்க புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை கொண்டு வந்த பெருமை தமிழ் பேசும் மக்களுக்கு உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மூன்று விடயங்களை முன்னிறுத்தி தான் ஜனாதிபதியாக வந்தால் புரையோடிப்போயுள்ள எமது இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை கொண்டு வருவேன், ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன், பழைய முறையிலான தேர்தலை அறிமுகப்படுத்துவேன் என்ற உறுதிமொழிகளை வழங்கினார்.

இதில் எதுவும் நடைபெறாமல் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. பழைய முறையிலான தேர்தல் முறையை கொண்டு வருவேன் என்று கூறிவிட்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலை பழைய முறையுமல்ல, புதிய முறையுமல்லாத ஒரு கலப்பு முறையிலான தேர்தலை இந்த நாட்டிற்கு அறிமுகப்படுத்தினார். இன்று அவரே கூறுகின்றார் இந்த தேர்தல் முறை இந்த நாட்டிற்கு உகந்ததல்ல, இதனால் கூடுதலான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உருவாகியுள்ளனர். இதனை குறைக்க வேண்டும் என்றும், இது முறையான தேர்தல் முறையல்ல என்றும் கூறியுள்ளார்.

இந்த நாட்டில் 341 உள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பாலான உள்ளுராட்சி மன்றங்களில் இந்த தேர்தல் முறையினால் ஒரு கட்சியினால் பெரும்பான்மையை பெற முடியாமல் சபையை அமைப்பதற்கு மிகவூம் ஒரு திண்டாட்டமான சூழ்நிலைகள் காணப்பட்டன.

தெற்கிலே ஐக்கிய தேசிய கட்சி கூடுதலான வட்டாரங்களில் வெற்றி பெற்றாலும் மாற்றுக் கட்சியாக மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பணத்தை கொடுத்து உறுப்பினர்களை வாங்கும் நிலை இந்த தேர்தல் முறையிலானால் உருவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் காத்தான்குடி நகர சபையை தவிர மற்றைய மன்றங்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மன்றங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தான் கூடுதலான ஆசனங்களை பெற்றிருந்தது. ஆனால் வாழைச்சேனை பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றிக் கொள்ள முடியாமல் சென்று விட்டது என்றார்.

மில்லர் விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.குகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.குணசேகரம் மற்றும் அரச அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.