அன்னை பூபதியின் நினைவு தூபியில் அரசியல் கட்சி நினைவு தின நிகழ்வுகள் நடாத்த தடை!

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினவு தூபியில் அரசியல் கட்சிகளே அல்லது அமைப்புக்களே நினைவு தின நிகழ்வுகள் நடாத்த அனுமதிக்க முடியாது என அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்தார்.

அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வு சர்சை தொடர்பாக அவரின் மகள் லோகேஸ்வரன் சாந்தி நேற்று  புதன்கிழமை (18-04-2018) மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள அவரது வீட்டில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய விசேட செய்தியில் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடா்பாக அவா் மேலும் தெரிவிக்கையில்........

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினவு தூபியில் அரசியல் கட்சிகளே அல்லது அமைப்புக்களே நினைவு தின நிகழ்வுகள் நடாத்த அனுமதிக்க முடியாது. இது அவரின் நான்கு பிள்ளைகளும் சுயமாக எடுத்த முடிவு.

அதேவேளை பொதுமக்கள் மற்றும் பிள்ளைகளாகிய எங்களின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் நினைவு தினம் நாளை 19 ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்தார்.

தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த எமது தாயாரான அன்னை பூபதியின் 29 ஆண்டு நினைவு தினத்தையிட்டு அங்கு நிகழ்வுகள் நடாத்திய அரசியல் வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை செய்யவில்லை.

அதேவேளை எமது தாயாருக்கு 10 பிள்ளைகள் என உரையாற்றினர். எமது தாயாருக்கு 6 பிள்ளைகள் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் நாங்கள் 4 பிள்ளைகள் தான் உள்ளோம் .

அவ்வாறு எமது தாயாரின் வரலாறு தெரியாது எமது தாயாரையும் அவமானப்படுத்தியுள்ளதுடன் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து பணங்களை பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.



இவ்வாறான நிலையில் தான் இந்த வருடம் அரசியல் வாதிகளோ அமைப்புக்கள் சார்பாக நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு எதிராக காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றோம்.

தாயாரின் பெயரை பயன்படுத்தி தேசத்தின் வேர்கள் என்ற அமைப்பு கால்பந்தாட்ட போட்டி நடாத்திவருகின்றது.

இதனை தடைசெய்ய இதற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தபோதும் விளையாட்டு போட்டியில் பங்கபற்றிய வீரர்களின் நன்மை கருதி இறுதிநாள் விளையாட்டுப் போட்டிக்கு இன்று அனுமதியளித்துள்ளோம்.

அதேவேளை நாங்கள் எவரினதும் பிற்புலனில் செயற்படவில்லை என்பதுடன் தேசத்துக்காக உயிர் நீத்த எங்களது தாயாரையும் எங்களையும் அவமானப்படுத்துவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்.

அந்த வகையில் நாங்கள் 4 பிள்ளைகளும் சுயமாக எடுத்து முடிவு. எனவே நாளை இடம்பெறும் நினைவு தினத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தலாம். ஆனால் அஞ்சலி செலுத்திவிட்டு உரையாற்றுவதையே நிகழ்வை நடத்தேவே அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.