மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய ஆசிரியருக்கு அநீதியிழைத்த வலயக்கல்விப் பணிப்பாளர்..! காந்தி பூங்காவில் ஆசிரியர் உண்ணாவிரதப் போராட்டம்

மட்டக்களப்பு – கிரான்குளம் பிரதேசத்தில் ஆசிரியராகக் கடமையாற்றும் ஒருவர், வலயக்கல்விப் பணிப்பாளரின் அநீதிக்கு எதிராக காந்தி பூங்காவில் இன்று (புதன்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

விபத்தொன்றில் காயமடைந்த இவருக்கு, நீண்ட தூரம் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வலயக்கல்விப் பணிப்பாளரால் குறுகிய தூரத்தில் உள்ள பாடசாலையொன்றில் பணியாற்ற தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டது.

எனினும் குறித்த ஆசிரியரது தற்காலிக இடமாற்றத்திற்கான காலம் நிறைவுபெற்றமையை அடுத்து, மீண்டும் நிரந்தர பாடசாலைக்குச் செல்லுமாறு வலயக் கல்விப் பணிப்பாளரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மறுப்புத் தெரிவித்தே குறித்த ஆசியரியர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.