கல்முனையில் உணவுப் பரிசோதனைகளை தீவிரப்படுத்த மாநகர சபை நடவடிக்கை


(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவகங்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் நடாத்திய கலந்துரையாடலின்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இயங்கி வருகின்ற உணவகங்கள், சந்தைகள், மரக்கறி கடைகள், கிழங்கு பொரியல் கடைகள், மற்றும் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் பேணப்படுவதன் அவசியம் குறித்து இக்கலந்துரையாடலில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் இவை அனைத்திற்கும் கல்முனை மாநகர சபையின் வர்த்தக அனுமதிப் பத்திரம் பெறப்பட்டிருக்க வேண்டும் எனவும் அனுமதி பத்திரங்கள் பெறாமல் நடத்தப்படும் உணவகங்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் நாட்களில் இவற்றை உறுதி செய்யும் பொருட்டு பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது எனவும் இதற்காக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.எம்.அஹ்சன். அம்பாறை மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டு பரிசோதகர் முஹம்மட் தஸ்தகீர், மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.எம்.சத்தார் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.