பேண்தகு எதிர்காலத்தை அடைதல் ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையினதும் பிரதான குறிக்கோளாகும் - ஜனாதிபதி

பேண்தகு எதிர்காலத்தை அடைதல் ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையினதும் பிரதான குறிக்கோளாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொதுநலவாய அமைப்பின் நிறைவேற்று சபை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுடன் இணைந்ததாக நேற்று பிற்பகல் லண்டன் நகரிலுள்ள லென்கெஸ்டர் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுநலவாய நிறைவேற்று சபையில் கலந்துகொள்ள வருகைதந்த ஜனாதிபதியை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அம்மையார் வரவேற்றார்.

உலக நாடுகள் பலவற்றின் அரச தலைவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் இந்த நிறைவேற்று சபையில் பொதுநலவாய அமைப்பின் பசுமை பிரகடனமும் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , ஒரு தீவு என்ற வகையில் எதிர்கால சந்ததியினரின் பயன்பாட்டிற்காக எமது நிலப்பரப்பு, காடுகள், ஆறுகள் மற்றும் சமுத்திரம் என்பவற்றுடன் பேண்தகு எதிர்காலத்தை உறுதி செய்தல் தொடர்பாக இலங்கை மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்டார்.

பூகோள ரீதியில் இலங்கை கேந்திர முக்கியத்துவமுடைய மையப் புள்ளியில் அமைந்துள்ளதுடன், உலகின் வளர்ச்சியடைந்துவரும் பொருளாதார சக்தியாக ஆசிய நாடுகளே உருவெடுத்து வரும் இந்த சந்தர்ப்பத்தில் எமது நாடும் தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் காரணமாக பெற்றுக்கொள்ளக்கூடிய அனுகூலங்களினால் வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றது என ஜனாதிபதி தெரிவித்தார்.

வறுமையை இல்லாதொழித்தல், தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தல், சமத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் பேண்தகு அபிவிருத்தி போன்ற இலக்குகளை அடைவதற்காக எமது மக்களுக்கு கடல்சார்ந்த சூழலில் இருந்து அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் நிரந்தரமான, பேண்தகு எதிர்காலத்தை அடைவதற்கான மார்க்கம் இதுவாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

ஐக்கிய இராச்சியத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 'தூய்மையான சமுத்திரங்களுக்கான ஒப்பந்தத்திற்கு' பூரண ஒத்துழைப்பினை வழங்க நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், இந்த பின்னணியில் 'பொதுநலவாய அமைப்பின் பசுமை பிரகடனத்தை' நாம், சமுத்திரங்கள் சகலருக்கும் பொதுவான பொறுப்பும் மரபுரிமையும் ஆகும் என்றவகையில் அதனை எமது ஒன்றிணைந்த முயற்சியினால் பாதுகாக்க வேண்டும் என்பதனால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி , அனைவரையும் ஒன்றிணைத்து, நம்பகரமான வழிமுறைகளினூடாக இணைந்து செயற்பட்டு முன்னோக்கி பயணிக்கவும் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளவும் கூடிய இலக்குகளை அடைதலே பேண்தகு எதிர்காலத்திற்கான இலக்காகும் என குறிப்பிட்டார்.

பொதுநலவாய அமைப்பு இது தொடர்பாக பரஸ்பர நன்மை பயக்கத்தக்க புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான பின்னணியை வழங்கும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.