Wednesday, April 18, 2018

மட்டக்களப்பு எங்கும் களைகட்டிய அக்ஷயதிரிதியை

ads


தமிழர்களின் பண்பாடுகளில் மிக முக்கிய இடம் வகிக்கும் அக்ஷய திருதியை இன்று (புதன்கிழமை) நாடு முழுவதிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள நகை விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் நிறைந்து காணப்பட்டனர்.

சில நகை விற்பனை நிலையங்களில் பெருமளவான மக்கள் நகை கொள்வனவு செய்த வாடிக்கையார்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்பட்டன.

இத்தினத்தில் நகை வாங்கி அணிவதால் என்றும் செல்வம் கொழிக்கும் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கையாகும்.
அக்ஷய" என்றால் குறைவில்லாதது என்று பொருள். அக்ஷய என்ற சொல் வளர்தல் என்று பொருள்படும். சயம் என்றால் கேடு, அட்சயம் என்றால் கேடில்லாத அழிவில்லாத பொருள் என்பதாம். அன்றைய தினத்தில் நாம் செய்யும் எச்செயலும் குறைவின்றி வளர்ந்துகொண்டே இருக்கும். திருதியை தினத்தில் செய்யும் எச்செயலுக்கும் விருத்தி உண்டு என்பது பழமொழியாகும்.

மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை திரிதியை திதி வந்தாலும், சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளில் மூன்றாம் பிறை நாளன்று வருவதே அக்ஷய திருதியை நாள். இந்த வருடம் சித்திரை மாதம் 5ம் நாள் 18-04-2018 அன்று அக்ஷய திருதியை.


இந்த அக்ஷய திருதியை மகாலட்சுமிக்கான நாள். எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது அற்புதமான பலன்களைத் தரும். அக்ஷய திருதியை நாள் முன்னோர்களை நினைத்துவணங்குவதற்கும் சிறந்த நாள். காரணம் முன்னோர்கள் அருளால், குடும்பத்தில் சாந்தி, ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அட்சய திருதியை நாளின் சிறப்புக்கள்..!

1.பகவான் பரசுராமர் அவதரித்த நாள்..!
2.கங்கை நதி பூமியை தொட்ட நாள்..!
3.திரேதா யுகம் ஆரம்பமான நாள் ..!
4. கிருஷ்ணர் குசேலருக்கு செல்வங்களை அள்ளிக் கொடுத்த நாள்..!
5.வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்...!
6.பஞ்சபாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்..
7.ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்..!
8.குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்..!
9.அன்னபூரணி அம்பாள் அவதரித்த நாள்.
10. தான தர்மங்களை செய்வதற்கு சிறந்த நாள்.

லட்சுமி வாசம் செய்யும் இடம்

அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சௌபாக்கியங்களையும் தரவல்ல லட்சுமி தேவி எங்கெல்லாம் வாசம் செய்கிறாள் எந்த
இல்லங்களில் இருக்கிறாள் எந்த பொருட்களை விரும்புகிறாள் என்று பார்த்தோமானால் தெய்வ பக்தி, ஆற்றல், துணிவு, பொறுமை, இனிய பேச்சு, பெரியோரை மதித்தல், போன்ற நற்பண்புகள் உள்ளவரிடம் நீங்காது இருப்பாள் என்பது நம்பிக்கை ஆகும்.

சுத்தமான இடம்

சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வீட்டை சுத்தம் செய்து எப்பொழுதும் தூய்மையாகவும் கோலமிட்டும், தீபமேற்றியும் வழிபாடு செய்கின்றனரோ அங்கே ஸ்ரீதேவியின் வாசம் நிரந்தரமாக இருக்கும். சங்கு, மஞ்சள், குங்குமம், கற்பூர ஜோதி, துளசிச் செடி, வாழை மரம், நெல்லிக்காய், பூரண கும்பம் போன்றவற்றிலும், பசு, யானை போன்றவற்றிலும் திருமகள் நீங்காது இருப்பாள்.

பூஜை செய்வது எப்படி?

வீட்டில் பெண்கள் அதிகாலை எழுந்து குளித்து , குத்துவிளக்கேற்றி, மகாலட்சுமி படம் அல்லது அரிசி நிறைந்த செம்பு, அல்லது
நீர் நிறைத்து அதில் வாசனை திரவியங்களான பச்சை கற்பூரம், ஏலம், போட்டு வைத்து வாசனை மலர்களால் தங்களுக்கு தெரிந்த மந்திரம் கூறி பாயசம் நைவேத்தியம் செய்து மகாலட்சுமியை வணங்க வேண்டும்.சுமங்கலிக்கு தட்சணை

பூஜை செய்யும் போது வீட்டிற்கு சுமங்கலிகளை அழைத்து முடிந்த வரை தட்சிணை வைத்து தோலுரிக்காத மட்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள், குங்குமம் தந்து வணங்கினாலே மகாலட்சுமி மகிழ்ந்து நம் இல்லம் வருவாள்.


அன்னதானம் செய்யலாம்

இந்த நல்ல நாளில் நாம் பெரியோர்களையும் முன்னோர்களையும் வணங்க வேண்டியது முக்கிய கடமையாகும். அட்சய திருதியை அன்றைய தினம் பசித்தோருக்கு உணவு வழங்குதல் இல்லாதவர்களுக்கு உடை கொடுத்தல் ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்தல் போன்றவை நம்மை குறைவில்லாதசெல்வமுடனும் நிறைந்த ஆயுளுடனும் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும்.

உதவி செய்யுங்கள்

இறைவனை வழிபடுவதோடு அன்று செய்யும் தானங்கள் அளப்பரிய புண்ணியத்தைத் தரும். குடை, விசிறி, எழுது கோல், அரிசி, தண்ணீர் பாத்திரம், உணவு பொருட்கள், வஸ்திரம், பசு இப்படி தங்களால் இயன்ற தானங்களை செய்யலாம்.
அக்ஷய திருதியை தினத்தை "நல்லுதவி தினமாக " கொண்டாடலாம் இது நம் முன்னோருக்கு செய்யும்
நன்றியாகும்.

அவல் நிவேதனம்

இன்றைய நாளில் கிருஷ்ண பரமாத்மாவுக்கு அவல் படைத்து, பூஜை செய்தால் அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இறைவனுக்குச் செய்யப்படுகிற நிவேதனம், பூஜை ஆகியவை வளத்தையும் நலத்தையும் தரும்.

குபேரன் அதிபதியான தினம்

ஸ்ரீ குபேர பகவான், ஒரு அட்சய திருதியை நன்னாள் அன்று இறைவனை வணங்கித் துதித்தார். அதன் பயனாக இறைவன் இவரை வடதிசைக்கு அதிபதியாக்கி சங்கநிதி, பதுமநிதி, கச்சநிதி, கற்பநிதி, நந்தநிதி, நீலநிதி, மகாநிதி, முகுந்த நிதி, மகாபத்மநிதி என்னும் நவநிதிகளையும் அளித்து அழகாபுரி என்னும் குபேரபுரியை ஆளும் அருளை வழங்கினார்.

பரசுராமர் அவதார தினம்

அக்ஷய திருதியை தினமானது மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது மணிமேகலைக்கு இந்நாளில் தான் அக்ஷய பாத்திரம் கிடைத்தது.அதனால் அன்று முதல்மக்களின் பசியை போக்குவதையே தன் கடமையாக கொண்டிருந்தாள்.

சந்திரன் சாபம்

சாபம் பெற்று தேய்ந்து போன சந்திரன் அக்ஷய திருதியை தினத்தன்று சாப நிவர்த்தி பெற்று அக்ஷய திரிதியை தினத்திலிருந்து மீண்டும் வளரத் தொடங்கினார். இதை வைத்துப் பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் எல்லாம் வளர்பிறை போல வளரும். எனவே தங்கம் வாங்குவது பழக்கமானது.

பொன், பொருள் சேர்க்கை

தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் சேர வேண்டும் என்றால் அட்சய திருதியை நாளில் வாங்கினால் வளமுடைய வாழ்வைப் பெறலாம் என்பது ஐதீகம். அன்று விலையுயர்ந்த பொருட்கள்தாம் வாங்க வேண்டும் என்பதில்லை. அன்றைய தினம் ஹோமம், ஜபம் மற்றும் தானம் செய்வது சிறப்பைத் தரும்.

தானம் செய்வது சிறப்பு

தங்கள் பொருளாதார நிலைக்கு தக்கவாறு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது சிறப்பு. குடை, விசிறி, ஆடை, நீர்மோர், பானகம், காலணி, மல்லிகைப் பூ, உத்ராட்சம், புத்தகம், பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்கள், நோட்டு, தயிர் சாதம், போர்வை அல்லது பாய் போன்ற பதினாறு வகை தானங்களைச் செய்வது பல மடங்கு புண்ணியத்தை அளிக்கும் என்பது நம்பிக்கை.

குலேசன் கதை

வெறும் கையுடன் தன் நண்பன் கண்ணனைக் காணச் செல்லக் கூடாது என்றெண்ணி, இருந்த ஒரு பிடி அரிசியை அவலாக்கி, அதனை சுத்தமான கிழிசல் துணியில் கட்டிக்கொண்டு சென்றார் குசேலர். ஆர்வமாய் கிருஷ்ணர் அதனைப் பெற்றுக்கொண்டு, அவலை வாயில் இடும்போது அக்ஷய என்றார்.

செல்வம் பெருகியது

நண்பனிடம் விடைபெற்று, தன் இல்லம் திரும்பிய குசேலர், தன் இல்லத்தைக் காணாது தேடினார். அது மாளிகையாக மாறிவிட்டிருந்தது. செல்வச் செழிப்புடன் இருந்த மனைவியைக் கண்டு வியந்தார். இந்த வளங்கள் யாவும் கிருஷ்ணர் கூறிய அக்ஷய என்ற சொல்லால் கிடைத்தது. எனவே நாமும் நம்மால் முடிந்த அளவு அக்ஷய திருதியை தினத்தில் தானம் செய்து வளம் பெறுவோம்.
இம்முறை இக் கடமைகளை கடைப்பிடிக்காதவர்கள் எதிர் வரும் காலங்களில் கடைப்பிடிக்கலாம்.

இன்று   மட்டக்களப்பு மற்றும் செங்கலடி பிரதேசங்களின் நிகழ்த்தப்பட்ட அக்ஷய திருதியை படங்களைக் காணலாம்

மட்டக்களப்பு எங்கும் களைகட்டிய அக்ஷயதிரிதியை Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
 

Top