மட்டக்களப்புத் தேச ஆலய நிருவாகக் கட்டமைப்பில் முக்கியத்துவம் பெறும் 'வண்ணக்கர்'- சொற்பதம் குறித்த தேடல்:

-கவிக்கோ வெல்லவூர்க் கோபால்-

(குறிப்பு: பல ஆய்வாளர்களதும் கல்விமான்களதும் வேண்டுகோளின் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட தேடலின் பிரதிபலிப்பான இக்கட்டுரையின் தகவல்கள் ஆரம்பநிலைப்பட்டவையாகும். இது குறித்த மேலதிக தகவல்கள் தெரியவரின் அவை மேலும்  பயனுள்ளவையாக அமையும.; இக்கட்டுரையானது இதுவரை எவராலும் முழுமையாக முன்னெடுக்கப்படாத தன்மையில் மேலதிக ஆய்வுகளுக்கும் மீளுருவாக்கத்திற்கும் உரித்துடையது எனலாம்)

    மட்டக்களப்புத் தேசத்தின் ஆலய நிருவாகக் கட்டமைப்பின் தலைமைத்துவத்தைக் குறிப்பதான 'வண்ணக்கர்' எனும் சொற்பிரயோகம் பிரதேச சிறப்பியல்பில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகும். இலங்கையின் ஏனைய ஆலய நிருவாகக் கட்டமைப்பில் பேணப்படாத இச்சொற் பிரயோகம் மிக நீண்டகாலமாக அறியப்பட்ட தமிழகத்தின் ஆலய நிருவாகச் செயல்பாட்டிலோ அன்றேல் கேரளத்தின் ஆலய நிருவாகக் கட்டமைப்பிலோகூட  அறியப்படவில்லை. நாம் தொடர்புகொண்ட பொலநறுவையைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்விமான்களும் கண்டிசார்ந்த சிங்களப் பேராசிரியர்களும் அளித்த தகவல்களில் 'வண்ணக்குறாள' என்ற சொற்பிரயோகம் மட்டக்களப்புத்தேசத்தை ஒட்டிய சிங்களக் கிராமங்களில் இருந்தபோதும் அது பௌத்த மக்களின் வழிபாட்டோடு சம்பந்தப்பட்டதாக அமையவில்லையென்பதுவும் மட்டக்களப்பின் இந்துமக்களின் பாரம்பரியத்தினூடாக கலந்ததொரு சொற்பிரயோகமாகவே கொள்ளப்படத்தக்கதெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    வண்ணக்கன் எனும் பெயர்ச்சொல்லானது உள்ளூர்ப் பயன்பாட்டில் காரிய நிருவாகி எனும் – Manager என்ற ஆங்கிலப் பதத்திற்கு ஒப்பான தென தமிழ்ப் பேரகர முதலியை (1924) சான்றுபடுத்திக் கூறப்படுவதும் கவனத்திற்குரியதாகும். இதனிடையே அரச்சலூர் கல்வெட்டினை ஆய்வுசெய்த மகாதேவன் அதில்வரும் கொடையாளனான மலைய வண்ணக்கனை மலைநாட்டைச்சேர்ந்த கொடையாளனென கருதுகின்றார். அவரது கருத்தின்படி வண்ணக்கன் என்பது கொடையாளன் என்ற கருத்தில்வருவது உணரப்படுகின்றது.

சங்ககாலப் புலவர்களில் சிலர் வண்ணக்கன் என்ற அடைமொழியோடு குறிப்பிடப்படுவதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்க்கிளான்
வண்ணக்கன் தாமோதரனார்
    வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்
    விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
    வண்ணக்கன் சோருமருங் குமரனார்
போன்ற புலவர்களை இதில் பட்டியலிடலாம். ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசியின் உரையாசிரியர் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பற்றிய குறிப்பில் அவர் நாணய பரிசோதனையை மேற்கொள்ளும் தொழிலில் இருந்தவராகக் காண்பிக்கும் நிலையில் அத்தொழிலினை மேற்கொள்பவர்களை வண்ணக்கன் எனும் பதவிப்பெயரால் அழைத்திருக்கமுடியும் எனச்சில ஆய்வாளர்கள் கருதவும் செய்கின்றனர்.

    இதனிடையே 1997ன் பின்னர் தொடராகச் சில ஆண்டுகள் கொங்கு நாட்டின் முக்கிய நகரமான கோயம்புத்தூரில் நாம் வாழ்ந்த நிலையில் அங்குள்ள ஒரு முதன்மைச் சமூகமான கொங்கு வேளாளரின் கல்விமான்களுடனும் கலைஇலக்கியவாதிகளுடனும்    நெருங்கிப்பழகிய தன்மையில் பெறப்பட்ட பல தகவல்கள் இதில் ஒரு ஆரம்பகட்டத் தேடலுக்கு வழிகாட்டலாக அமைவது தெரிகின்றது. கொங்குநாடு என்பது இன்றைய கரூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், சேலம் மாவட்டம், தருமபுரி மாவட்டம், கோவை மாவட்டம், உதகை மண்டலம் என விரிவுபட்டு தமிழகத்தின் வடமேற்கு மலைத்தொடர்வரை நீண்டிருந்தது.
    கொங்கு மண்டலச் சதகம் அதன் எல்லை குறித்துப் பின்வருமாறு கூறும்.
        வடக்கு பெரும்பாலை வைகாவூர் தெற்கு
        குடக்கு பொருப்புவெள்ளிக் குன்று – கிடக்கும்
        கழித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டுக்
        குளித்தண் டலையளவு கொங்கு

      

வரலாற்றில் இப்பிரதேசம் தனித்தும் சோழர் ஆதிக்கத்திலும் சிலபிரிவுகள் சேரர் ஆதிக்கத்திலுமென மாறிமாறி நிருவகிக்கப்பட்டது. இங்கு பரவலாக வாழுகின்ற கொங்கு வேளாளர் மிகுந்த முக்கியத்துவம்பெற்ற சமூகத்தினராக அடையாளப்படுத்தப்படுகின்றனர். அவர்களிடையே
    கோவேந்தர், சேரர், பாண்டியர், தேவேந்திரர், வண்ணக்கர்,    கணக்கர்,ஓதாளர்,ஒழுக்கர்
    தனஞ்செயர், சேடர் எனத் தொடரும் அறுபது குல மரபினர் வாழுகின்றனர்.
இவர்களில் வண்ணக்கர்குல மரபினரை 'வண்ணக்கர்குல வள்ளல்கள்' என்ற அடைமொழியால் அழைப்பதை இன்றும் அவதானிக்கமுடிகின்றது. கொங்கு நாட்டு வேளாளர்கள் நிருவாக வசதிக்காக தாம் வாழ்ந்த நாட்டில் 24 நிருவாகப் பிரிவுகளை ஏற்படுத்தினர். ஓவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு அவையிருந்தது. அதில் அனைத்து ஊர்களும் அங்கம் வகித்தன. அவர்கள் ஒன்றுபட்டு நாட்டுக் கருமங்களை சிறப்பாக மேற்கொண்டனர். மிக முக்கியமாக ஆலயங்களுக்கு நன்கொடையளித்தலும் திருப்பணிகளை மேற்கொண்டு அவற்றைச் செவ்வனே பராமரித்தலும் முன்னுரிமைபெற்றிருந்தது. இதனை தமிழகத்தின் எப்பகுதியிலும் இல்லாத ஒன்றாகவே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆலய வழிபாட்டியலில் இவர்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுபவர்களாகவே இன்றுமுள்ளனர். இவர்கள் தங்கள் தங்கள் சமூகப் பண்பாட்டுத் தேவையின் நிமித்தம் கொங்கு சிவப்பிராமணர்;களையும் குலகுருக்களையும் கொண்டவர்களாகவுள்ளனர்.

    மட்டக்களப்புத்தேச வரலாற்றில் கி.பி 1ஆம் 2ஆம் நூற்றாண்டுகள் மிகுந்த முக்கியத்துவம்பெறுவதை வரலாறு பதிவுசெய்துள்ளது. மட்டக்களப்பு பூர்வீக வரலாற்று ஏடுகளின் காலக் கணிப்பினையும் அதனோடு சம்பந்தப்பட்ட தமிழக நிகழ்வுகளின் காலக் கணிப்பினையும் ஒப்புநோக்கும் தன்மையில் 30 ஆண்டுகள் தொடக்கம் 90 ஆண்டுகள்வரையான வேறுபாடுகளை ஆய்வுகளில் அவதானிக்கமுடிகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை சிலப்பதிகார காலமான கி.பி 2ஆம் நூற்றாண்டை மையப்படுத்தியதாகவே பெருமளவு வரலாற்று நிகழ்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளமையை மறுக்கமுடியாதுள்ளது. இலங்கை வரலாற்றிலும் அன்றைய காலக்கணிப்புகள்  முழுமையடையவில்லையென்றேகொள்ளவேண்டும். இக்காலத்தே மட்டக்களப்பு வரலாறு நாகர்முனை (திருக்கோவில்) சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வரலாற்று நிகழ்வுகளை விரிவாகவே பதிவுசெய்துள்ளது.         

 இவ்வாலயம் தமிழகத்தின் சோழராட்சியின் துணைகொண்டு செப்பனிடப்பட்டு சிறப்பாக குடமுழுக்குச் செய்யப்படுவதையும் தமிழகத்தின் அந்தணர் மற்றும் காராளர் (வேளாளர்) வரவினையும் அதில் முக்கியப்படுத்துவதையும் நம்மால் அவதானிக்கமுடிகின்றது. இதன்போது தமிழக ஆட்சியாளனான திருச்சோழன் பற்றியும் அவனது திருக்கோவில் ஆலய  பங்குபணிபற்றியும் பேசப்படுவதையும் பார்க்கின்றோம். இதுவரையான ஆய்வுகளின் அடிப்படையிலும்
    'கரிபரி காலாட் பொருதளற் சென்னி
    விரிதரு கருவூர்த் திருமாச் சோழ...'
எனவரும் பாடலடியை அடியொற்றியும் கொங்குநாடு உட்பட்ட தமிழகத்தின் ஆட்சியாளனாகவும் ஈழம்வரை படைநடாத்திய சோழவேந்தனாகவும் கருதப்பட்ட திருமாவளவன் கரிகால் சோழனே திருமாச் சோழனாகவும் திருச்சோழனாகவும் குறிப்பிடப்படுகின்றான் என்பதனை நம்மால் பதிவுசெய்யமுடிகின்றது. இவனது காலத்தை கி.பி 1ஆம் நூற்றாண்டாகவே தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வாளர் பேராசிரியர் வே.தி.செல்லம் கருதவும் செய்கின்றார்.       
                

திருமாச் சோழனுக்கு முன்னர் இவனது தந்தையான சோழன் இளஞ்சேட் சென்னியும் இவனுக்குப் பின்னர் சோழன் நெடுங்கிள்ளியும் ஆட்சியாளர்களாக அறியப்படுகின்றனர். நெடுங்கிள்ளி சேரன் செங்குட்டுவனுடன் இணைத்துப் பேசப்படுவதால் திருமாச்சோழனது ஆட்சிக்காலமானது மட்டக்களப்பு வரலாறு குறிப்பிடும் காலத்தை நெருங்கிவருவதை நம்மால் உறுதிசெய்யமுடிகின்றது.

இவையனைத்தையும் கவனத்தில்கொள்ளும் தன்மையில் திருக்கோவில் ஆலயத்தின் கடமைகளின் நிமித்தம் திருமாவளவனின் ஆட்சிக்காலத்தில் அங்கிருந்து  அழைத்துவரப்பட்ட வேளாளமரபினர் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்த கொங்குநாட்டின் ஆலய நிருவாகச் செயல்பாட்டில் முக்கியத்துவம் பெற்றுவிளங்கிய கொங்குநாடு வண்ணக்கர்குல வேளாள மரபினராகவிருக்க வாய்ப்புள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. அத்தோடு அக்காலகட்டத்தில் அவர்களுடன் அங்கு வந்தவர்களாக கருதப்படும் அந்தணர் மரபினர் கொங்கு சிவப்பிராமணராக இருக்கவும் வாய்ப்புள்ளது. 2004ல் அக்கரைப்பற்று, தம்பட்டை, திருக்கோவில் பகுதியில் சிவப்பிராமணர் தொடர்பில் நாம் மேற்கொண்ட களஆய்வில் பெறப்பட்ட தகவல்களையும் இங்கு கருத்தில்கொள்ளவேண்டியுள்ளது.

திருக்கோவில் கோரக்களப்பில் குடியமர்ந்த வேளாளர், பின்னர் அவர்களது பணிநிமித்தம் முதலில் அவ்வாலய வண்ணக்கர்களாகவும் அதன்பின்னர் அங்கிருந்து அழைத்துவரப்பட்ட அவர்களில் சிலர் மட்டக்களப்புத் தேசத்தின் திருப்படை மற்றும் தேசத்துக் கோவில்களின் வண்ணக்கர்களாகவும் பணியாற்றியுள்ளமையும் பணியாற்றி வருவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. அவர்களால் அறியப்பட்ட வண்ணக்கர் எனும் ஆலய நிருவாகச் செயல்பாட்டாளர் காலப்போக்கில் மட்டக்களப்புத் தேசத்தின் எல்லா ஆலயங்களிலும் உள்வாங்கப்பட்ட நிலையில் முக்கியத்துவம் பெற்ற அனைத்துச் சமூகத்தினருக்கும் ஏற்புடைத்தான ஆலயத் தலைமைத்துவ அடையாளமாக மாற்றமுற்று  இன்று நிலைபெற்றுள்ளமையைப் பார்க்கின்றோம்.

கி.பி 13ம் நூற்றாண்டில் கலிங்க மாகோனது சமூகக் கட்டமைப்பின் உருவாக்கத்தினைத் தொடர்ந்து ஒரே சமூகக் கட்டமைப்பில் நிலைபெற்றிருந்த குறித்த  இவ்வேளாள குலத்தினர் பின்னர் ஏனைய மட்டக்களப்புச் சமூகத்தினரைப்போல் ஏழு குடிமரபினராக மாற்றம் பெறலாயினர்.

இவையனைத்தையும் ஒப்புநோக்கும் தன்மையில் 'வண்ணக்கர்' எனும் சொற்பிரயோகம் கொங்கு வேளாளர் மரபுசார்ந்த ஆலயச் செயல்பாடுகளில் இன்றும் மிக்க ஈடுபாடுகொண்ட 'வண்ணக்கர்குல வள்ளல்கள்' எனப்படுவோரின் முன்னோர்களை மையப்படுத்தியதாக உருவாக்கம் பெற்றிருக்கலாமென்றே கருதமுடிகின்றது.

துணைச் சான்றுகள்:
01.    அகநானூறு – 125:18, 246:8
02.    கார்மேகக் கவிஞர், கொங்கு மண்டல சதகம் - சாரதா பதிப்பகம் -2008
03.    அரிச்சலூர் கல்வெட்டு – வாசிப்பு மகாதேவன்
04.    தமிழ் பேரகரமுதலி- தமிழகராதி – 1924
05.    இராமச்சந்திரன் செட்டியார் கோ.ம, கொங்குநாட்டு வரலாறு -1954
06.    புலவர் செ.இராசு, கொங்குநாடு –கொங்கு வேளாளர் பேரவை, ஈரோடு
07.    மேற்படி – கொங்கு வேளாளர்குல வரலாறு (தொகுதி 02) மேற்படி
08.     முனைவர் இரா.கா.மாணிக்கம், வளமார் கொங்கு – பண்பாடும் வரலாறும் (டாக்டர் பி.கே.கிருஷ;ணராஷ; வானவராயர் நூலாக்கக் குழு: 
 https://www.scribd.com/doc/267456717/
09.  Kavundans or Vellalas." - Indian Antiquary - Volume 44 -, Swati Publications, 1985   
10.Dr.K.A. Meenakshisundaram,  A Brief Study of the Marriage System of the Kongu Vellala Gounder Community, Journal of Tamil Studies Vol. 6, December 1974.
11.    பேராசிரியர் வே.தி.செல்லம் - தமிழக வரலாறும் பண்பாடும்,மணிவாசகர் பதிப்பகம்- 2000
12.    கவிக்கோ வெல்லவூர்க் கோபால் - மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் -(திருத்திய 3ஆம் பதிப்பு) 2011