இன்று பதவியேற்ற வாகரைப் பிரதேச சபையின் தவிசாளர் பொலிஸாரினால் கைது

மட்டக்களப்பு, வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபையின் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வாகரை பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று இன்று தவிசாளராக பதவி ஏற்ற ந.கோணலிங்கம் வாகரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு நாட்களுக்கு முன்னர் வாகரை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையிலேயே இன்று அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரு தினங்களுக்கு முன்னர் குறித்த பிரதேச கிராம சேவையாளர் கைது செய்யப்பட்ட நிலையில் தவிசாளரும் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். வீடு ஒன்றில் வேறு இனத்தை சேர்ந்த நபர் ஒருவர் இருந்துள்ளது தொடர்பிலான தகவல்கள் கிடைத்த நிலையில் அந்த வீட்டினை இளைஞர்கள் சுற்றிவளைத்து குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலேயே தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவமானது அரசியல் வட்டாரத்திலும், வாகரைப் பிரதேசத்திலும் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.