பன்குளம் - பறையன்குளம் எல்லைக்காளி அம்பாள் ஆலயத்தின் சங்குஸ்தாபனம்


(கதிரவன்)
பன்குளம் - பறையன்குளம் எல்லைக்காளி அம்பாள் ஆலயத்தின் சங்குஸ்தாபனம் புதன்கிழமை 2018.04.18 மதியம் 11.40 மணிக்கு நடைபெற்றது. எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆலயம் அமைப்பதற்கான முதல் அடிக்கல்லினை நட்டு வைத்தார்.

திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையில் இவ்வாலயம் நிர்வகிகப்பட்டு வருகிறது. சோழர் காலத்து ஆலயமாக இது விளங்குகிறது. கடந்த 1983ம் ஆண்டு இடம்பெற்ற இடம் பெயர்வினைத் தொடர்ந்து ஆலயம் சிதைவுக்கு உள்ளானது. 2014ம் வருடம் தொடக்கம் இவ்விடத்திற்கு வந்த பேரவையினர் கொட்டில் ஒன்றினை அமைத்து பிரதி பௌர்ணமி தோறும் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருக்கோணேஸ்வரத்தின் எல்லையில் அமைந்து அருளாட்சி புரிவதால் இதனை எல்லைக்காளி அம்பாள் என அழைத்து வழிபட்டு வருகின்றனர்.

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் ஆதீனகர்த்தா சோ.ரவிச்சந்திரக்குருக்கள் தலைமையில் சங்குஸ்தாபனம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண முந்நாள் கல்வி அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவருமான சி.தண்டாயுதபாணி, திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் முந்நாள் மதிப்பார்ந்த பொதுச் செயலாளர் செ.சிவாதசுந்தரம்,

எதிர்கட்சி தலைவரின் பிரத்தியேக செயலாளர் ச.குகதாசன், திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சு.ரமேஸ்வரன், பொதுச்செயலாளர் செ.விஜயசுந்தரம் ஆகியோர் அடிக்கல்லினை நட்டுவைத்தர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த அடியவர்களும் அடிக்கல்லினை நட்டு வைத்தனர்.

இந்நிகழ்வினைக் காண அருகில் உள்ள நாமல்வத்த என்னும் இடத்தில் இருந்து இஸ்லாமியர்களும் வந்திருந்தனர். இவ்வாலயம் திருகோணமலை அநுராதரபுரம் வீதியில் பன்குளம் சந்தியில் இருந்து 9கி.மீற்றர் தொலைவில் உள்ள நாமல்வத்தை என்னும் இடத்தை வந்தடைந்து அங்கிருந்து காட்டு பாதை வழியாக 7 கி.மீற்றர் சென்று ஆலயத்தை அடைய முடியும்.

உழவு இயந்திரங்கள், மோட்டார் சைக்கிள்கள் மூலமாக அடியவர்கள் இவ்வாலயத்திற்கு பௌர்ணமி தினங்கள் தோறும் சென்று வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.இன்றைய தினம் எதிர்கட்சி தலைவர், பாராளுமன்ற உறுப்பினரது வாகனங்கள் இவ்வாலயத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.