கடன் வாங்குவதற்காக மட்டக்களப்பு மாவட்ட அரசியல் காரியாலயம் முன் அலைமோதும் மக்கள் கூட்டம்

ரவிப்ரியா
கடந்த ஒருவார காலமாக பெரியகல்லாற்றில் அமைந்துள்ள பிரபல அரசியல் கட்சியொன்றின் மாவட்ட காரியாலயம் முன் பட்டிருப்பு தொகுதியின் சகல பகுதிகளிலிருந்தும் மக்கள் தினமும் திரண்டு வருகின்றனர். ஆதிகாலை தொடக்கம் மாலைவரை காத்திருந்து படிவங்களை பூர்த்தி செய்த கொடுக்கின்றனர்.

ஐவர் அடங்கிய ஒவ்வொரு குழு அங்கத்தவர்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் சுயதொழில் கடன் பெறும் நோக்கத்துடனேயே தாங்கள் வருகை தந்தள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் பின்தங்கிய பகதிகளிலிருந்த முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமாத்தி வந்திருப்பதைக் காணக் கூடியதாக இருந்தது. கடனைப் பெற்றுச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையை அவர்களிடம் காண முடிந்தது.

இது சம்பந்தமாக காரியாலயத்தில் இருந்த கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஹெங்காதரனிடம் நேரடியாக வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.

எமது பட்டிருப்பு தொகுதி மக்கள் வாழ்வாதாரம் இன்றி இன்னல் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்கு சுய தொழில் ரீதியாக உதவி, அவர்களை முன்னேற்ற வேண்டுமென திடசங்கர்ப்பம் பூண்டேன். கம்பஹா மாவட்டத்தில் எனது நட்பு ரீதியான அரசியல்வாதி ஒருவர் அத்தகைய சுயதொழில் கடன் ஒன்றை எற்பாடு செய்து வெற்றி பெற்றுள்ளார்.

அதை அடியொற்றி அத்தகைய ஒரு கடன் திட்டத்தை தென் இலங்கை பிரபல நட்பு அரசியலவாதி ஒருவரின் ஆலோசனைக்கமைய பயனாளிகளின் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியள்ளேன். இத்தரவுகள் அரச வங்கி ஒன்றினால் பரீசீரிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு மட்டுமே அத்தகைய குழு ரீதியான சுயதொழில் கடன் வழங்கி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

எனினும் பொதுமக்கள் இவ்விடயத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அலைமோதுகின்றனர் என தெரிவித்தார். தான் குறைந்தது இலகு வட்டியில் பிரதேசத்தில் உள்ள 4000 மக்களுக்கு இத்தகைய கடனை அரச வங்கிமூலம் வழங்கிவைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

அரச வங்கிகளோடு தொடர்பு கொண்டபோது அத்தகைய எற்பாடுகள் பற்றி எதுவும் தெரியாதென தெரிவித்தனர். தகவல்களை சமர்ப்பித்த சிலரிடம் இதுபற்றி வினவியபோது இதில் அரசியல் நோக்கமும் இருக்கவே செய்கின்றது என்பதையும் தாங்கள் காரியாலயத்தில் இடம் பெற்ற உரையாடல் மூலம் உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்தனர்.

வங்கி கடன் விவகாரங்களில் அரசியல்வாதிகள் தலையிடுவது நல்லாட்சியின் இலட்சணங்களில் ஒன்றா என நிதி நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.