போரதீவுப்பற்று பிரதேசசபையின் கன்னியமர்வும் சில நபரால் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஆலயம் தொடர்பான நடவடிக்கையும்


(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று(18) சபைத் தவிசாளர் யோ.ரஜனியின் தலைமையில் நடைபெற்றது. பிரதி தவிசாளர் நா.தர்மலிங்கம் உட்பட 18 உறுப்பினர்களும் மற்றும் பிரதேச சபை தவிசாளர் அ.ஆதித்தனும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு உறுப்பினர்களால் சமர்பிக்கப்பட்ட பிரேரணைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் சபைக்கு வருமானமீட்டுதலுக்கான வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அவற்றில் முதற்கட்டமாக போரதீவுப்பற்றில் உள்ள மயானங்களை எல்லைப்படுத்தி அவற்றை சுத்தம் செய்யதல், வீதி விளக்குகள் பொருத்துதல் மற்றும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதாகவும் தீர்மானங்கள் பெறப்பட்டது.

அத்துடன் சபைக்கு வருமானமீட்டுதல் தொடர்பாக மண்டூர் வைத்தியசாலையில் வாகன பாதுகாப்பு தரிப்பிடம் அமைத்தல், உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து இறைச்சி கடைகளை அமைத்தல் எனவும், இனிவரும் காலங்களில் எமது மண் வளத்தை சூறையாடும் உரிமங்களை இரத்து செய்து உள்ளூர் தொழிலாளர்களுக்கு பிரதேச சபையூடாக உரிமங்களை வழங்கல் போன்ற தீர்மானங்களும் பெறப்பட்டது.

அத்துடன் போரதீவுப்பற்று எல்லையினுள் சில நபர்களால் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஆலயம் தொடர்பாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையுடனும், போரதீவுப்பற்று பிரதேச சபையினரும், அவ்வாலய நில்வாகமும் கலந்துரையாடி தீர்க்கமாமான தீர்வினை பெற வேண்டும் எனவும் சபை முடிவெடுத்ததது.

இதன்போது தவிசாளர் உரையாற்றுகையில் அனைவரும் கடந்த தேர்தலுடன் கட்சிகளை மறந்து எம்மை இவ்வுயரிய ஆசனத்திற்கு அனுப்பி வைத்துள்ள மக்களின் நலன்கருதி அவர்களின் குறைநிறைகளை அறிந்து அதற்கேற்றாற் போல் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து செயற்பட்டு எமது சேவைக்காலத்தினுள் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கி மக்கள் மனங்களில் நாம் அனைவரும் சிறப்பான இடத்தை தக்க வைத்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.