பெரியகல்லாற்றில் தமிழர் பாரம்பரியத்திற்கு புத்துயிரளித்த புத்தாண்டு குதுகலம்

(ரவிப்ரியா)
பெரியகல்லாறு மத்திய கல்லூரி மைதானத்தில் 50 வருட  நீண்ட வரலாற்றைக் கொண்டதும் கல்லாற்றின் முதலாவது பதிவுபெற்ற கல்லாறு விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு  குதூகலம் தமிழர் பாரம்பரிய கலை விழாவாக ஞாயிறன்று ந.தனுசாந் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் மட் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டார். அதிவிசேட அதிதியாக மட் பிரதி பொலிஸ்மா அதிபர் டவிள்யு.ஜே.ஜகோடாராச்சியும், விசேட அதிதியாக விஸ்பவிமான தேசபந்து எம்.விஸ்வநாதன் (சொர்ணம் குழுமங்களின் அதிபதி) ஆகியோர் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழர் பாரம்பரிய விளையாட்டு கலை கலாசாரத்திற்கு முன்னுரிமை அளித்து சகல நிகழ்வுகளும் வடிவமைக்கப்படடது அனைத்துத் தரப்பினரையும் வயது பேதமின்றி குதூகலிக்கவே செய்தது. சங்க காலத்துள் எம்மை அழைத்துச் சென்று இரவு இன்னிசை அளித்து அனைத்திலும் மக்களை லயிக்கச் செய்தது மட்டுமல்லாமல் மக்களை அதிகளவு கூடச்செய்தது நிகழ்விற்கான மக்களின் அங்கீகாரத்தையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தியது.

மாட்டு வண்டிகள் அணிவகுக்க அதிதிகள் அழைத்துவரப்பட்டது, அழகிய நடனம் மூலம் மனதைக் கவர்ந்து, முரசைறிதல் மூலம் நிகழ்வை ஆரம்பித்து பண்டைய மன்னர் காலத்தை நினைவூட்டி, பாரம்பரிய பால்சோறு கேக் வெட்டும் பாணியில் பால்சோறு வெட்டி பகிர்ந்து, பாரம்பரிய விளையாட்டுக்களான வழுக்கு மரம் ஏறுதல்,  தலையணைச் சண்டை, சாக்கோட்டம், கயிறிழுத்தல் என்பவற்றுடன் சிறுவர்களுக்கும் ஏராளாமான போட்டிகளை செவ்வனே நடாத்தி, பெண்களை உற்சாகப்படுத்த கிடுகு பின்னுதல், தேங்காய் துருவுதல், பணிஸ் சாப்பிடுதல் போன்ற நிகழ்வகளையும் நிறைவாக நிகழ்த்தி, காதலர் தெரிவு ஆணழகன், அழகுரானி போட்டிகளையும் அறிமுகப்படுத்தி அசத்தலாகவே அனைத்தும் நடைபெற்றன.

முக்கிய அதிதிகளை பொன்னாடை போர்த்தி கௌரவித்து கிராமத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தியதுடன்,  கல்லாற்று வரலாற்றுச் சாதனையை இராஜகோபுரம் அமைத்து சாதித்த இராஜகோபுர அமைப்புக்குழு தலைவரும், வண்ணக்கருமான மு.மன்மதராஜாவும் அரசாங்க அதிபரால் பொன்னாடை போர்த்தி கௌரவித்து பாராட்டுப் பத்திரமும் கையளித்தது நிகழ்விற்கு சிகரம் வைத்த நிகழ்வாகும்.

பிரதம அதிதி மற்றும் அதிவிசேட அதிதி ஆகியோர் தமது உரைகளில் நிகழ்வை சிறப்பாக வர்ணிக்கவே செய்தனர். அது கிராமத்திற்க பெருமை சேர்த்தது. அதெவெளை ஒரு செய்தி சிறுமை சேர்க்கவே செய்தது.

பிரதம அதிதி தலைவரின் ஆரம்ப உரையில் குறிப்பிட்ட மைதான புனரமைப்பு கோரிக்கை சம்பந்தமாக குறிப்பிடடதற்கு அரசாங்க அதிபர் அளித்த பதில் இந்த கிராமத்தில் உண்மையான அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் உள்ளத்தையும் குத்தவும் குதறவும் செய்தது. உண்மை அனைவரையும் உறுத்தவே செய்தது. உண்மையைப் போட்டுடைத்தற்காக அரச அதிபருக்கு நன்றி சொல்ல இந்த கிராமம் கடமைப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதான புனரமைப்பிபிற்கான முன்மொழிவு வந்தபோது இதற்கு இந்த சமூகத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அது கைவிடப்படடதாக அரசாங்க அதிபர் தனதுரையில் தெரிவித்ததுடன் வாய்ப்புக்கள் வரும்போது சமூகம் ஒற்றுமையுடன் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கவலையுடன் அறிவுறுத்தினார். இதில் தங்கள் தரப்பில் எந்த தவறும் இடம்பெறவில்லை என்பதையும் தெளிவபடுத்தினார்.

எனவே கிராமத்தில் உள்ள இந்த புல்லுருவிகளை இனம்கண்டு பற்றி கிராமக்கள் ஒன்றிணைந்து ஒரு முடிவுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்பதை இங்கு வலியுறுத்தாமல் இருக்க முடியவில்லை. இந்த நிகழ்வு பெறமதியான ஒரு செய்தியை அரசாங்க அதிபர் மூலம் சொல்ல வைத்திருப்பதை இந்த கிராம மக்கள் எவரும் அலட்சியம் செய்துவிடக் கூடாது.