காரைதீவு பிரதேசசபையின் கன்னி அமர்வு

காரைதீவு பிரதேசசபையின் கன்னிஅமர்வு நேற்று(20) வெள்ளிக்கிழமை பிரதேசசபையின் புதிய தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டதுடன் ஒரேயொரு பெண்உறுப்பினர் கொணர்ந்த பிரேரணையான அன்னை பூபதிக்கான மௌனாஞ்சலியும் செலுத்தப்பட்டது.


தவிசாளர் கே. ஜெயசிறில் உபதவிசாளர் எம்.எம்.ஜாகீர் உள்ளிட்ட 12உறுப்பினர்களும் இக்கன்னிஅமர்வில் கலந்துகொண்டனர். சபைத்தவிசாளர் அருணாசலம்சுந்தரகுமாரும் சமுகமளித்திருந்தார்.


பிரதேசத்திலுள்ள வளங்களைப்பாதுகாத்தல் வீதிஅபிவிருத்தி தெருவிளக்குகள் பொருத்துதல் சுகாதாரம் உட்கட்டமைப்பு மற்றும் மக்களின் சமுகநலத்திட்டங்கள் தொடர்பில் பல பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.


காரைதீவுப் பிரதேசசபையின் தவிசாளர் கே. ஜெயசிறில் உபதவிசாளர் எம்.எம்.ஜாகீர் உறுப்பினர்களான எம்.இஸ்மாயில் எம்.பஸ்மீர் ச.நேசராசா த.மோகனதாஸ் எம்.ஜலீல் சி.ஜெயராணி ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன் மு.காண்டீபன் எம்.ரணீஸ் ஆகியோர் கலந்துகொண்டு கன்னியுரையாற்றினார்கள்.


உறுப்பினர்களைக்கொண்டு 5 குழுக்கள் அமைக்கப்பட்டன. திண்மக்கழிவுமுகாமைத்துவம் தெருமின்விளக்குகள் நூலகஅபிவிருத்தி சூழல்சுற்றாடல் வீதிஅபிவிருத்தி ஆகிய 5குழுக்கள் அமைக்கப்பட்டன.


அந்தந்த வட்டாரங்களுக்கு அந்தந்த உறுப்பினர்கள் பொறுப்பாக்கப்பட்டதோடு சகல குழுக்களுக்கும் தவிசாளர் தலைவராகஇருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து உறுப்பினர்களும் தேர்தல் காலகசப்புணர்வுகளை மறந்து இனமதகட்சி பேதம் பாராட்டாமல் ஒற்றுமையாக வெளிப்படைத்தன்மையாக மக்களுக்கான சேவையை இனநல்லுறவுடன் சமாதானமாக அர்ப்பணிப்புடன் சமத்துவமாக முன்னெடுக்கவேண்டும் என சகலஉறுப்பினர்களும் தத்தமது கன்னியுரைகளில் கருத்துரைத்தனர்.


எதிர்வரும் சனிக்கிழமை பிரதேசசபை வளங்களைப்பார்வையிட சகல உறுப்பினர்களும் இணைந்து களப்பயணத்தை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.