அவுஸ்திரேலியாவினால் நாடுகடத்தப்பட்ட இலங்கை தமிழ் குடும்பம் விமானத்திலிருந்து மீண்டும் அழைப்பு! 98 ஆயிரம் பேர் ஆதரவுடன் கையெழுத்துவேட்டை!


நாடுகடத்தப்படவுள்ள நிலையில் மெல்பேர்ன் தடுப்புமுகாமில் வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்குமாறுகோரி சேரிக்கப்பட்ட ஏறக்குறைய 1 லட்சம் கையெழுத்துக்கள் உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புகலிடம்கோரி ஆஸ்திரேலியா வந்த நடேசலிங்கம்-பிரியா தம்பதி மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் 9 மாதக் குழந்தைகள் பல காலமாக குயின்ஸ்லாந்தின் Biloela-வில் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களது குடியுரிமைச் சான்று கடந்த தை - மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்ததையடுத்து,  அவர்கள் நாடு கடத்தப்படும் நோக்கில் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நடேசலிங்கம்-பிரியா குடும்பம் நாடுகடத்தப்படுவதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தநிலையில் இவ்வழக்கின் மீதான தீர்ப்பு இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இந்தப் பின்னணியில் நடேசலிங்கம்-பிரியா தம்பதியின் நாடு கடத்தலைத் தடுக்கக்கோரி குறித்த தம்பதி வாழ்ந்து வந்த Biloela பகுதியைச் சேர்ந்த Angela Fredericks என்பவரின் முன்னெடுப்பில் கையெழுத்து வேட்டை ஒன்று நடத்தப்பட்டது.

இக்கையெழுத்து வேட்டையூடாக திரட்டப்பட்ட 98 ஆயிரம் கையெழுத்துக்கள் உள்துறை அமைச்சர் Peter Dutton-இடம் சமர்ப்பிக்கப்பட்டதாக Angela Fredericks தெரிவித்தார்.