மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் ! காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்கு 2017ஆம் ஆண்டு 631.19 மில்லியன் ரூபா ஒதுக்கீடு


நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை காலை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா, அரச உயர் அதிகாரிகள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது, 2017ஆம் ஆண்டு மத்திய மற்றும் மாகாண அரசின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. நிறைவு செய்யப்படாத வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதன்போது பணிப்புரை வழங்கிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பணிகளை நிறைவு செய்ய நிதி தேவைப்பாடு உள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தினார். 

தான் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை நிறைவு செய்ய தேவையான நிதியை விடுவித்துள்ளதாகவும், தற்போது தான் வகிக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஊடாக பாரிய அபிவிருத்திப் பணிகளை மட்டக்களப்பில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இதன்போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார்.
காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழு 2017ஆம் ஆண்டு 201 வேலைத்திட்டங்களுக்காக 631.19 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.