கிழக்கு மாகாண பெண் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு


(ஜெ.ஜெய்ஷிகன்)
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைப் பிரதிநித்துவப்படுத்தும் செயல் விளைவுடைய பெண் தலைவர்களை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் உள்ளுராட்சி பெண் உறுப்பினர்களின் இயலுமையைக் கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மொண்டி ஹோட்டலில் நடைபெற்றது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர் சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு யுசையிட் (USAID) நிறுவனத்தின் அனுசரணையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜயவிக்கிரம தலைமையில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் மாநகர, நகர, பிரதேசசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின்  பணிப்பாளர் சுஜீவ சமரவீர, பால்நிலை மற்றும் அனைவரையும் உட்படுத்தும் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி.துசித்தா பிலப்பிட்டிய, இந்திக்க தயாரத்ன, திருமதி.நளினி ரத்னராஜா ஆகியோர் வளவாளர்களாக பயனுறுதி வாய்ந்த செயற்பாட்டுடன் கூடிய விரிவுரைகளை வழங்கினர்.

இங்கு அரசியலில் பெண் பிரதிநிதித்துவம் பெறுவதற்காக பெண்களுக்குள்ள சவால்கள் தொடர்பாக தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் கருத்துரை வழங்கினார்.

இதன்போது மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜயவிக்கிரம உரையாற்றுகையில்-

கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி மன்ற பெண் பிதிநிதிகளில் ஒரேயொரு தவிசாளர் தெரிவு செய்யப்பட்டமை மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களுக்கு அரச பதவிகளிலான முதல் அனுபவமாக உள்ளதனால் அரச பதவிகளுடாக மக்களுக்கு நம்பிக்கையுடன் பணியாற்ற அவர்களை  வலுவூட்டும் முகமாக பெண் தலைவர்களின் மென்திறன்களைப் பலப்படுத்தல் வேண்டும்.

பெண்கள் மற்றும் குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் குழுக்களின் அரசியல் பங்கு பற்றுதலைப் பலப்படுத்தல் வேண்டும். புதிதாக தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்கள் கூட்டாகச் சேர்ந்து அரசியல் சமூக விடையங்களையும் யதார்த்தங்களையும் தேசிய மட்டத்திற்கு குரல் கொடுப்பதற்கு ஆதரவு திரட்டும் ஒரு சக்தி வாய்ந்த மூலமாக இருக்க வேண்டும்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதல் பெண் தவிசாளரும் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஒரேயொரு தவிசாளராகவும் பணியாற்றும்  திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் பணிகள் முன்னுதாரணமாக அமைய வாழ்த்துக்கள் தெரிவித்தார்.