பொதுப்போக்குவரத்துவசதியற்ற துறைநீலாவணைக்கு சீரான முறையில் சுகாதாரவசதிகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படவேண்டும்


(சா.நடனசபேசன்);
பொதுப்போக்குவரத்து வசதியற்ற துறைநீலாவணைக் கிராமத்திற்கு சீரான முறையில் சுகாதாரவசதிகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. இதன் பிரகாரமே இவ் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து இருக்கின்றோம் என கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.அன்ஸார் தெரிவித்தார்..

துறைநீலாவணை வைத்தியசாலையில் 80 இலட்சம் பெறுமதியான ஆண் நோயாளர்களுக்கான விடுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் புதிதாக அமைக்கப்பட்ட அவசரசிகிச்சைப்பிரிவு திறந்துவைக்கும் நிகழ்வும் 25 ஆம் திகதி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.ஏ.சி.ரி.ஹரீட் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்
இந்நிகழ்வில் கிழக்குமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தம் கிழக்குமாகாண திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் பிரேமநாத்  மட்டக்களப்பு சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி எல்.எம்.நவரெட்ணராசா மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவைகள் திட்டமிடல் அதிகாரி டாக்டர் குகன்கஸ்தூரி மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபை உறுப்பினர் க.சரவணமுத்து உட்பட பலர்; கலந்துகொண்டனர்.
வரவேற்புரையினை வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுத் தலைவரும் அதிபருமான பி.யோகராசா நன்றியுரையினை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் ஓய்வுநிலை அதிபர் பூ.நவரெட்ணராசா ஆகியோர் நிகழ்த்தினர்.
அவர் மேலும் பேசுகையில்  துறைநீலாவணைக்கிராமத்தின் நிலைமை தொடர்பாக யாரும் சொல்லத்தேவையில்லை ஏன் எனில் நான் அயல்கிராமமான மருதமுனையில் வசிப்பதனால் இம்மக்களது நிலைமை நன்றாக அறிந்தவன் அந்தவகையில் இக்கிராமத்து மக்களுக்கான சுகாதார சேவை சீராக நடைபெறுவதற்கு அதிகாரிகள் உரிய வேளையில் முன்னெடுக்க வேண்டியுள்ளது
மனிதனுக்கு நோய் என்பது சொல்லிவைத்து வருவதில்லை திடீரென வருவது அவ்வாறு வருமானால் பொதுப் போக்குவரத்து இல்லாதமையால் தனியார் வாகனங்களை வாடகைக்குப் பயன்படுத்தவேண்டிவரும் இவ்வாறு செய்வதற்கு எல்லோராலும் முடியாது இதனால் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் இவ்வாறான நிலையினைக் கருத்தில்  கொண்டே அவசரசிகிச்சைப்பிரவு அமைக்கப்பட்டது அதன் பிறகுதான் தற்போது 80 இலட்சம் பெறுமதியான ஆண் நோயாளர் விடுதியும் அமைக்கப்பட இருக்கின்றது இந்த விடுதி எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யப்பட்டு நோயாளர்களின் பாவனைக்கு கையளிக்கப்படவேண்டும் இதனை உரியவர்கள் உரிய நேரத்தில் நிறைவுசெய்யவேண்டும்.
மக்களது கஷ்டங்களைப் புரிந்து அதனை நிறைவேற்றுவதற்கான ஒழுங்குகளை அனைவரும் செய்யவேண்டும் அவ்வாறு இல்லாது மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றக்கூடாது அவ்வாறு ஏமாற்றினால் இறைவனுக்குப் பதில்சொல்லியாகவேண்டும்.
இங்கு கட்டப்பட இருக்கின்றநோயாளர் விடுதி மற்றும் அவசரசிகிச்சைப்பிரிவு உட்பட இவ் வைத்தியசாலையில் உள்ள வளங்கள் அனைத்தும் இங்குள்ள மக்களுக்குப் பிரயோசனமானதாக அமையவேண்டும் அதனைச் செய்வதற்கு வைத்தியசாலை நிருவாகம் எவ் வேளையிலும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றார்.