மட்டு, அம்பாறையில் பெண்களை மயக்கி அறிமுகம் இல்லாதவர் செய்யும் செயல்! மக்களே அவதானம்!


(செ.துஜியந்தன்)
மட்க்களப்பு அம்பாறை ஆகியமாவட்டங்களில் வீதியில் தனிமையில் செல்லும் ஆட்களை மயக்கி அவர்களிடமிருக்கும் நகை, பணம் என்பவற்றை திருடிச்செல்லும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த புதன்கிமை கல்முனைப் பிரதேசத்தில் இலங்கைவங்கிக்குச் சென்றுவிட்டு வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த பெண்ணொருவரை வழியில் இடைமறித்த ஆண் ஒருவரும், பெண்ணொருவரும் அவரிடம் வேறு ஒருவரின் முகவரியை விசாரிப்பது போன்று பேச்சுக்கொடுத்தவர்கள்.

திடிரென அப்பெண்ணின் கைப்பையில் ஏதோ ஒரு துணியை தூக்கிப்போட்டுள்ளனர். இதன் பின்பு அப்பெண் குறிப்பிட்ட சில நிமிடங்கள் தமது சுயநினைவை இழந்துள்ளார். அதன் பின் அவரிடமிருந்த இரண்டுலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பணம் மற்றும் நகைகளை அபகரித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சில நிமிடங்கள் கழித்து சுயநினைவுக்கு திரும்பிய அப்பெண் தன்னிடமிருந்த பணம் நகைகளை இழந்துள்ளமை பற்றி தெரியவந்ததும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கள மொழியில் பேசிய இருவரே இச் செயலில் ஈடுபட்டுள்ளனர். கல்முனையில் பெரியநீலாவணையைச் சேர்ந்த பெண்ணொருவரும் இவ்வாறு மயக்கநிலைக்கு சென்ற பின் நகைகளை இழந்திருந்தார். இது மாந்திரிகச் செயற்பாடாக இருக்கலாம் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்தவாரம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குச் சென்ற செட்டிபாளையத்தைச் சேர்ந்தவரும் தற்போது மட்டக்களப்பில் வசித்துவரும் ஆசிரியை ஒருவரும் சுயநினைவு இழக்கப்பட்ட நிலையில் தாலிக்கொடி, காப்பு, மாலை என 21 இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகளை இவ்வாறான திருட்டுக்கும்பலிடம் பறிகொடுத்திருந்தார். 

தனிமையில் செல்லும் பெண்களை அணுகி அவர்களிடம் பேச்சுக்கொடுத்து மந்திரக்கல் மற்றும் மயக்கமருந்து தெளித்து அவர்களது உடமைகளை திருடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இவ்வாறான சம்பவங்களால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மட்டக்களப்பு பிரதேசத்தில் மயக்கமருந்து கொடுத்து திருட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டுவந்த இருவரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

பழக்கமில்லாத நபர்கள் ஏதாவது குடிப்பதற்க்கு கொடுத்தாலோ, அழைத்தாலோ அவர்களிடம் அவதானமாக நடந்துகொள்ளுமாறு பாதிக்கப்ட்டவர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.