கிரான் பிரதேசத்தில் நடைபெறவுள்ள இலவச வைத்திய முகாம்


(பைஷல் இஸ்மாயில்)
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறிய நிலைமையின் கீழ் கிரான் வாகநேரி கிராமத்தில் வாழ்ந்து வரும் குடும்பங்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவர்களுக்கான மாபெரும் இலவச வைத்திய முகாம் ஒன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வாய் மற்றும் முக சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அனுஷன் மதுசங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்படவுள்ள இந்த மாபெரும் இலவச வைத்திய முகாம் எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு கிரான் வாகநேரியில் அமைந்துள்ள சுகாதார சேவைகள் காரியாலயத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணிவரை இச்சேவை இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகக் கனிசமான மக்கள் வாய்ப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விஷேடமாக கிராமப் புறங்களில் வாழ்கின்ற மக்களும், இளம் சந்ததியினருமே இந்த வாய்ப் புற்று நோய்க்கு பெருமளவில் ஆளாகியுள்ளதுடன், ஒரு மாதத்துக்கு 15 வாய்ப் புற்று நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

இதனை கருத்திற்கொண்டே, இந்த இலவச வைத்திய சேவையை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதுபோன்று நான்கு முகாம்களை வேவ்வெரு கிராமங்களில் நடாத்தியுள்ளதாகவும், இவ்வாறு நடாத்தும் வைத்திய முகாமில் வாய்ப் புற்று நோய் பரிசோதனை மற்றும் பற் சிகிச்சைப் பரிசோதனை  போன்ற பரிசோதனைகளுடன் அவர்களுக்கான வைத்திய ஆலோசனைகளுடன் இலவச மருந்து வகைகளும் வழங்கி வைக்கப்பட்டு வருவதுடன் குறித்த நோய் பற்றிய விழிப்புணர்வுகளும் நடாத்தாப்பட்டும் வருகின்றன.

இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக வாய்ப் புற்று நோய் மற்றும் முக சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அனுஷன் மதுசங்க, மட்டக்களப்பு பிராந்திய பல் வைத்திய நிபுணர் வைத்தியர் எம்.பி.அப்துல் வாஜீத் உள்ளிட்ட வைத்தியர்கள் இந்த இலவச வைத்திய முகாமில் கலந்துகொண்டு இச்சேவையை கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.