இளம் சமுதாயத்தை கல்வியிலும்,விளையாட்டிலும் கட்டியெழுப்ப வேண்டும்

(க. விஜயரெத்தினம்)

தகவல் தொழிநுட்ப கையடக்க தொலைபேசி பாவனையில் மூழ்கிக்கிடக்கும் எம் இளம் சமுதாயத்தை கல்வியிலும்,விளையாட்டிலும் கட்டியெழுப்ப வேண்டும்.ஒவ்வொரு பாடசாலைகளும் கல்வியிலும்,விளையாட்டிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தி தேசியமட்டப் போட்டிகளுக்கு கிழக்குமாகாணத்தை தயார்படுத்த வேண்டும். இதுவே கிழக்கு மாகாண ஆளுநரின் இன்றைய எதிர்பார்ப்பாகும் என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டவூல்யூ.ஜீ.திசாநாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு வலயமட்ட விளையாட்டுப்போட்டி வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில்(17.5.2018) பிற்பகல் 3.00 மணியவில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டவூல்யூ.ஜீ.திசாநாயக்க கலந்துகொண்டு பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் :-கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயத்தை சேர்ந்த 1100 பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுகின்றார்கள்.விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்கள் தேசியமட்டம் சென்று தமது சாதனைகளையும்,சவால்களையும் போட்டிபோட்டு ஜெயித்து காட்டவேண்டும்.தேசியமட்ட போட்டிகளுக்கு ஒவ்வொரு பாடசாலைகளும் மாணவர்களை தயார்படுத்தி, அவர்களை சரியான பாதைக்கு வழிகாட்ட வேண்டும்.இந்த விடயத்தில் பாடசாலையின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கூட்டுப்பொறுப்புடன் உழைக்க வேண்டும்.இவ்வாறு கூட்டுப்பொறுப்புடன் உழைக்கும்போதுதான் கிழக்கு மாகாணத்தின் கல்வி,விளையாட்டு என்பனவற்றை சாவால்மிக்க உலகிற்கு மாணவர்களை மாற்றியமைக்கலாம்.இதனால் கிழக்கு மாகாணத்திற்கு விருதுகளும்,சாதனைகளும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தகவல் தொழிநுட்பம் வளர்ச்சியடையாத பழையகாலத்தில் மாணவர்கள் கல்வியிலும்,விளையாட்டிலும் நினைத்து பார்க்க முடியாத வளர்ச்சியடைந்தார்கள்.ஆனால் தகவல் தொழிநுட்பம் வளர்ச்சியடைந்த இக்காலத்தில் மாணவர்கள்,இன்றைய சமூகத்தினர் கையடக்க தொலைபேசியில் தமது சிந்தனையை செலுத்தி அவற்றுக்குள் மூழ்கிக்கிடக்கின்றார்கள்.இதனால் கல்வி,விளையாட்டுக்களில் மாணவர்கள் நாட்டமில்லாதவர்களாக காணப்படுகின்றார்கள்.இதனை மாற்றியமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு பாடசாலையின் அதிபர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் மற்றும் பாடசாலை சமூகத்திற்கும் முழுப்பொறுப்புண்டு.விளையாட்டையும்,கல்வியையும் மாணவர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் போது நாட்டின் அபிவிருத்தி தங்குதடையின்றி வளர்ச்சியடையும்.கல்விக்காக அரசாங்கம் சகல வசதிகளுடன் பெருமளவு நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.இதனை உணர்ந்து ஒவ்வொரு மாணவர்களும் படிக்கவேண்டும்.
இவ்வருட இறுதிக்குள் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறலாம்.தேர்தல் நடைபெற்று மாகாணசபை அமைச்சுக்களுடன் மாகாணசபை ஆட்சி நடைபெறலாம்.கிழக்கு மாகாணத்தின் கல்வி,விளையாட்டு,தகவல் தொழிநுட்பம்,கலை கலாச்சாரம்,பண்பாடு,பாலர்பாடசாலை கல்வி,மீள்குடியேற்றம், மீள்புனரமைப்பு வேலைத்திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்கள் கிழக்குமாகாணத்தை கட்டியெழுப்புவதில் மிகக்கவனமாக உள்ளார்.பாடசாலைகளில் ஒழுக்கக்குழுவை ஆரம்பித்து  மாணவர்களின் ஒழுக்கம்,வரவு சரியாக பேணப்பட வேண்டும்.மாணவர்களை சிறப்பாக அறிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான கற்றல் கற்பித்தல்களையும்
,விளையாட்டுக்களையும்  தங்குதடையின்றி வழங்கும்போது கிழக்கு மாகாணத்தை தேசியமட்ட போட்டிகளுக்கு தட்டிக்கொடுத்து சாதனைகளை நிலைநாட்டமுடியும் எனத்தெரிவித்தார்.