வீரமுனையில் கண்ணகிக்கு விழா ஆரம்பம்


(பரமதயாளன்)

மட்டு- அம்பாரையில் களனி நிலம் சூழ்ந்து மட்டக்களப்பு வாவிக்கரையின் எல்லையில் சீர்பாத குலமக்கள் செறிந்து வாழும் பழம் பெரும் கிராமமாக விளங்கும்  வீரமுனைக் கிராமத்தில்  அருள்பாலித்திருக்கின்ற ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய வருடாந்தத் திருக்குளிர்த்தி வைபவம் எதிர்வரும் 22 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாக இருக்கின்றது. இதனை முன்னிட்டு இக்கட்டுரை வெளியாகின்றது.

சீர்பாத குலத்தவர் செறிந்துவாழும் வீரமுனைப் பதியில் ஆழியிலேகண்டெடுத்த அற்புதமுத்தாம் ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் கண்ணகை அம்மன் ஆலயமானது கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் கஜபாகுமன்னனது  காலத்திற்கு முன்பு இப்பகுதியில் பாண்டியர் ஆட்சி நிலவியகாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நான்கு ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும் என நம்பப்படுகிறது.

மாகோனது ஆட்சியின்பின்  இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் பாண்டியர் செல்வாக்குப் பெற்றிருந்தகாலமான கி.பி.1284 – கி.பி.1314 வரையானகாலப்பகுதியில் வீரமுனைக் கண்ணகை அம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டதாக அங்குள்ள சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றது.

வீரமுனையின் தென்பகுதியிலுள்ள கைகாட்டி மலைப்பகுதியில் பாண்டியர் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை முக்கிய சான்றாக இதனைமேலும் உறுதிப்படுத்ததுகின்றது.


இக்காலகட்டத்தில் கிழக்கிலங்கையில் கண்ணகை அம்மன் வழிபாடானதுஉன்னதநிலையினைப் பெற்றிருந்தது. ஈழதேசத்தைப் பொறுத்தவரையில் மட்டக்களப்புத் தமிழகத்தில் தான் கண்ணகையம்மன் வழிபாடு அதிகளவில் காணப்படுகிறது. 

கடந்தகாலங்களில் பல இன்னல்களையும் தாண்டி இவ்வாலயமானது இப்பகுதி மக்களின் ஆதரவோடு இன்று நம்பிவரும் அடியார்களின் குறைதீர்க்கும் நம்பிக்கைக்குரிய தலமாக திகழ்கின்றது.

வைகாசிமாதம் பிறந்துவிட்டால் அது கண்ணகை அம்மனுக்கு விழாக்காணும் மாதமாகவே காணப்படுகிறது.அதனாலேயே இம்மாத்தில் வீரமுனை மக்கள் பெரும் விழாக் கோலம் எடுப்பதுடன் வீரனையினை பக்தி மயமாக மாற்றுகின்றனர்.
இந் நம்பிக்கையின் வெளிப்பாடாக அடியார்களின் முழு ஆதரவோடு இவ்வருடம் கண்ணகை அம்மன் தங்கத்தினால் வடிக்கப்பட்டு அடியார்களின் ஆனந்தக் கண்ணீருடன் எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளார்.
அம்மனுடைய திருக்கதவு 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு 24 ,வியாழக்கிழமை 25, வெள்ளிக்கிழமை 26 சனிக்கிழமை ஆகியதினங்களில்  வீதி உலாவும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாற் குடப்பவனியும் கன்னிக்கால்வெட்டும் நிகழ்வும் 28 ஆம்திகதி திங்கட்கிழமை திருக்கல்யாணநிகழ்வும்  29 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி வைபவத்துடன் உற்சவம் நிறைவுபெற இருக்கின்றது.
 .இதனால் கண்ணகை அம்மனுக்கு பொற்சிலைவடித்த பெருமை வீரமுனைப் பதிக்குப் பெருமை சேர்த்திருப்பதோடு இப்பகுதிமக்கள் கண்ணகை அம்மன் மீது கொண்டுள்ள அளவற்ற பக்திமற்றும் நம்பிக்கையை நிலைநிறுத்தியுள்ளது.ஆலய கிரியைகள் இரா.அரசரெட்ணம் குரு தலைமையில் இடம்பெற இருக்கின்றது