விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நீர்ப்பாசன திணைக்களம் ! கண்டித்து விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்!


(சிவம்)

மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்டித்து உன்னிச்சைக் குளம் நிர்ப்பாசனத் திட்ட விவசாயிகள்இன்று  (30) மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தினர்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் ஒன்றுகூடிய உன்னிச்சை நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் விவசாய குடும்பங்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றினர்.

வாவிக்கரை வீதியில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி அந்தோனியார் ஆலய வீதியூடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றதுடன் அங்கு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இதன் பின்னர் போராட்டம் நிறைவடைந்தது.
இதன்போது, நீர்ப்பாசன திணைக்களத்திற்கு எதிரான பதாதைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்ததுடன், தமக்கான நிவாரணங்களை உரியவர்கள் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

கடந்த 24ஆம் திகதி உன்னிச்சைக்குளம் திறக்கப்பட்டதன் காரணமாக உன்னிச்சை நீர்ப்பாசன குளத்தினை அண்டிய சுமார் 6000 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. உன்னிச்சைக் குளத்தினை சிறந்த முறையில் நீர்ப்பாசன திணைக்களம் முகாமைத்துவம் செய்யாத காரணத்தினாலேயே இந்த நஷ்டம் ஏற்பட்டதாக இங்கு விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

சமீப சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள மழை சார்ந்த காலநிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் கடந்த 24ஆம் திகதி திறந்து விடப்பட்டன.

இதனால் சடுதியாக உன்னிச்சைக் குளத்தின் நீரேந்துப் பகுதிக்குக் கீழிருந்த விவசாய நிலங்கள், வயல்வாடிகள், வாடிகளிலிருந்த உடமைகள் எல்லாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் தாம் பாதிக்கப்பட்டதாக பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.

திடீரென வான் கதவுகளை முழுமையாகத் திறந்து விடாது கட்டம் கட்டமாகத் திறந்து விடப்பட்;டிருந்தால் தாம் அடித்துச் செல்லும் மடை திறந்த நீரால் பாதிப்பை சந்தித்திருக்க முடியாது என்றும் விவசாயிகள் கூறினர். அதிகாரிகள் அசமந்தமாக இருந்ததாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.