Tuesday, May 29, 2018

மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கண்ணகை அம்மன் திருக்குளிர்த்தி சடங்கு

ads
(செ.துஜியந்தன் )
மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு இன்று காலை வெகுசிறப்பாக நடைபெற்றபோது அம்மனின் திருக்குளிர்த்தி பாடப்படுகின்றது அதில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டமக்கள் கிராமிய வழிபாட்டையே தமது வழிபாடாக கருதி வாழ்ந்து வருகின்றனர் இம்மக்கள் சக்திவழிபாட்டில் மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருப்பதை இங்குள்ள கிராமங்கள் தோறும் அமைந்துள்ள சக்தி ஆலயங்கள் பறைசாற்றி நிற்கின்றன அந்தவகையில் கண்ணகையம்மன் காளியம்மன் மாரியம்மன் மீனாட்சியம்மன் திரௌபதையம்மன் நாககன்னியம்மன் ஆகிய பல ஆலயங்களை நிறுவி அதன் முலம் தமது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்

இவ்வகையில் மட்டக்களப்பு நகருக்கு தெற்கே 12 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது வரலாற்றுப்பிரசித்திபெற்ற மண்முணைப் பற்று புதுக்குடியிருப்பு கிராமம். இக்கிராமத்தின் மத்தியில் புகழ்பூத்த ஆலயமாக ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. புதுக்குடியிருப்புக் கிராமம் என்பது புதிதாகத் தோன்றிய புதுக் கிராமம் அல்ல. என்றென்றும் புதுக்குடியிருப்பாக இருக்கும் பழங் கிராமமாகும். மண்முனைப் பற்றை ஆட்சி புரிந்த சிற்றரசி உலகநாச்சியின் காலம் முதலாக முற்குகர் வாழ்கின்ற கிராமமே இதுவாகும்.

இலங்கைக்கு கண்ணகை அம்மன் வழிபாட்டை முதலில் கொண்டு வந்தவன் கஜபாகு மன்னாவான். அன்று முதல் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் கண்ணகை வழிபாடு நடைபெற்று வருகின்றது. சிங்கள மக்கள் கண்ணகை அம்மனை “பத்தினி தெய்யே” என அழைப்பதுடன் இதனை ஆண்டு தோறும் ‘பெரஹரா’ என வழிபட்டு கொண்டாடி வருகின்றனர். இந்தவகையில் கிழக்கிலங்கையில் கண்ணகை அம்மன் வழிபாடு நாலா பாகங்களிலும் வியாபித்து நிற்கின்றது. அந்தவகையில் புதுக்குடியிருப்பு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயத்தின் மரபும் வழிபாடுகளும் மிகத் தொன்மையானவை.

இற்றைக்கு பதினைந்தாம் நூற்றாண்டின் காலப்பகுதியில் இலங்கையில் கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்டு இந்து மதம் புறக்கணிக்கப்பட்டது. அவ்வேளையில் யாழ்பாண இராச்சியத்தில் இந்து மதம் சீரழிவதைக் கண்ட ஒத்துக்குடா கந்தன் என்பவர் மிகவும் மனம் வருந்தினார். இந்து மதத்தைப் பாதுகாப்பதற்காக அங்கிருந்து ஓடம் ஒன்றிலேறி புறப்பட்டு மட்டக்களப்பு பிரதேசத்திற்கு வந்துள்ளார். அவர் வரும்போது தன் சகோதரிகளான செம்பி, மைலி ஆகிய இருவரோடும் தன் புத்திரியையும் அழைத்துக் கொண்டு ஏழு கண்ணகை அம்மன் சிலைகளையும் தன்னோடு எடுத்துக் கொண்டு ஓடம் ஒன்றிலேறி இங்கு வந்தான்.

அவ்வாறு வந்தவேளை மண்முனைக்கு அருகில் ஒரு மணல் திட்டியில் ஓடம் தரை தட்டியதாகவும், அங்கு அவன் இறங்கிய இடமே புதுக்குடியிருப்பு எனக் கூறப்படுகின்றது.
இயற்கை எழில் கொஞசும் புதுக்குடியிருப்புக் கிராமத்தில் கண்ணகை அம்மன் வழிபாட்டை ஆரம்பித்தான். ஆரம்பத்தில் சிறாம்பி கட்டி தன் குடும்பத்தாருடன் வழிபட்டு வந்துள்ளான் அவ்வேளை கண்டி மன்னனுக்கு இவர்களை ஒற்றன் எனக்காட்டி ஆற்றில் மூழ்கடித்துக் கொன்றுள்ளனர். இவரின் சகோதரி செம்பி எனபவளை புதைத்த இடம் செம்பிவெளி எனவும் பேசப்படுகின்றது. இவ்விடங்களே இப்பொழுதும் புதுக்குடியிருப்பில் சிறாம்பியடி, செம்பிவெளி என அழைக்கப்படுகின்றன. ஒத்துக்குடா கந்தனின் வரலாற்றுக் காலத்தில் இருந்தே புதுக்குடியிருப்பு கண்ணகை அம்மன் வழிபாடு ஆரம்பமாகின்றது

பழைமையும் புதுமையும், அற்புதமும் நிறைந்த சக்தி ஆலயமாக இன்று புதுப்பொழிவுடன் புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் கம்பீரமாய் காட்சியளிக்கின்றது. இங்கு பழங்காலம் தொட்டு கதவு திறத்தலுடன் சடங்கு ஆரம்பித்து 5ம் நாள் திருக்குளிர்தியுடன் உற்சவம் நிறைவுபெற்று வந்தது. தற்போது எட்டு இரவுகளாக உற்சவம் மாற்றமடைந்துள்ளது.

முதலாம் நாள் கதவு திறத்தல் இரவுச்சடங்கு - பெத்தான்குடி மக்கள்
இரண்டாம் நாள் பகல் இரவுச் சடங்கு – படையாண்டகுடி மக்கள்
முன்றாம் நாள் பகல் இரவுச் சடங்கு – கோப்பிகுடி மக்கள்
நான்காம் நாள் பகல் சடங்கு – வேளாளர்குடி மக்கள்
நான்காம் நாள் இரவுச்சடங்கு – பணிக்கனார்குடி மக்கள்
ஐந்தாம் நாள் பகல், இரவுச் சடங்கு – காலிங்காகுடி மக்கள்
ஆறாம் நாள் பகல், இரவுச் சடங்கு (கலியாணக்கால் வெட்டுச் சடங்கு) – விரியப்படையாட்சிகுடி மக்கள்
ஏழாம் நாள் பகல் சடங்கு – பணிக்கனார்குடி மக்கள்
ஏழாம் நாள் இரவுச் சடங்கு (பச்சைகட்டுச் சடங்கு) – படையாண்டகுடி மக்கள்
எட்டாம் நாள் பகல் வட்டுக்குத்தலும் திருக்குளிர்த்தியும் - பெத்தான்குடி மக்கள்

என உற்சவம் நடைபெற்று வருகின்றது. இவ் உற்சவ காலங்களில் கிராம மக்கள் புலால் உண்பதைத் தவிர்த்த மிகுந்த பயபக்தியுடன் சமய அனுஸ்டானங்களை மேற்கொண்டு வருகின்றனர். கிழக்கிலங்கையில் மரபு சார்ந்த கண்ணகை வழிபாட்டினை பழமை மாறாது இன்றும் பேணிவரும் கிராமமாக புதுக்குடியிருப்புக் கிராமமே உள்ளது.
 மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கண்ணகை அம்மன் திருக்குளிர்த்தி சடங்கு Rating: 4.5 Diposkan Oleh: BATTINEWS MAIN
 

Top