அமெரிக்க காங்கிரஸ் குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, மக்கிலேனென் தொன்பெர்ரி தலைமையிலான அமெரிக்க காங்கிரஸ் குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றது.

மேலும், நாடு தற்போதுள்ள நிலைமை குறித்து தமது அதிருப்தியையும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, மக்கிலேனென் தொன்பெர்ரி தலைமையிலான அமெரிக்க காங்கிரஸ் குழுவினரிடம் இரா.சம்பந்தன் வெளிப்படுத்தினார்.


பெரும்பான்மையான மக்கள் தேசிய பிரச்சினைக்கான தீர்வு நிரந்தரமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் ஒரு அரசியல் யாப்பின் தேவையும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் பெரும்பான்மை மக்களின் தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமல் இருப்பதுதான் காணப்படுகின்ற பிரச்சினையாக அமைந்துள்ளது.

சில பெரும்பான்மைத் தலைவர்கள் அனைத்து மக்கள் குறித்தும் நியாயமாக சமத்துவமாக நோக்குவதனை விடுத்து கடும்போக்காளர்களை திருப்திபடுத்துவதிலேயே ஆர்வமாக உள்ளனர். அவர்கள் இவ்வாறு தொடர்ந்தால் நாடு மீண்டும் பின்னோக்கி செல்ல நேரிடும்.' என வலியுறுத்தினார்.

'ஜனாதிபதியும் பிரதமரும் இதய சுத்தியுடன் சிங்கள மக்களிடம் சென்று புதிய அரசியல் யாப்பிற்கான தேவையினை எடுத்துக்காட்ட வேண்டும். ஒவ்வொரு அரசாங்கமும் ஜனாதிபதியும் இது தொடர்பில் முயற்சிகளை எடுத்து வந்துள்ளமையினால் இந்த விடயங்களை விளங்கிக்கொள்வதில் சிங்கள மக்களுக்கு சிரமம் இருக்காது.' எனவும் அவர் எடுத்துக் கூறினார்.

நாம் பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டிற்குள்ளேயே ஒரு தீர்வினை எதிரிபார்க்கிறோம் என்பதனை வலியுறுத்திய இரா.சம்பந்தன் அதிகாராப் பகிர்வானது சர்வதேச உடன்படிக்கைகளான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள், பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை, சர்வதேச மனித உரிமைகள் சாசனம் போன்றவற்றின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதனையும் எதிர்க்கட்சி தலைவர் இதன் போது வலியுறுத்தினார்.