தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மீதான ஊழல் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், பதவியில் இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

இதற்கிணங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட ரலப்பனாவ எனும் தனி நபரைக் கொண்ட சுயதீன ஆணைக்குழு நேற்று (திங்கள்கிழமை) ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விசாரணைகளை ஆரம்பித்தது.

இதன்போது பல்கலைகழகத்தின் பதிவாளர், பிரதிப் பதிவாளர், விரிவுரையாளர்கள், விடுதிப் பொறுப்பாளர், முன்னாள் பொறியியலாளர், வேலை மேற்பார்வையாளர் உள்ளிட்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக எஸ்.எம்.எம். இஸ்மாயில், தொடர்ச்சியாக இரண்டு முறை பதவி வகித்திருந்தார். உபவேந்தர் பதவிக்காலம் மூன்று வருடங்களைக் கொண்டதாகும். இரண்டு முறைக்கு மேல், உபவேந்தர் பதவியினை ஒருவர் வகிக்க முடியாது.

அந்த வகையில் 06 வருடங்கள் உபவேந்தராகப் பதவி வகித்த இஸ்மாயில், 2015ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தை விட்டுச் சென்றிருந்தார். இந்தக் காலகட்டத்தில் இலங்கை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன ஆட்சிபீடமேறியிருந்தார்.

இதனையடுத்து, உபவேந்தர் இஸ்மாயிலின் பதவிக்காலத்தில் அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து, அப்போதைய பல்கலைக்கழக ஆசிரியர் (விரிவுரையாளர்கள்) சங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுமார் 220 பக்கங்களைக் கொண்ட ஆவணமொன்றினைத் தயாரித்த ஆசிரியர் (விரிவுரையாளர்கள்) சங்கம், அதன் பிரதிகளை நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு, லஞ்சம், ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு, ஜனாதிபதி செயலகம் மற்றும் கோப் எனப்படுகின்ற பொது நிறுவனங்கள் மீதான நாடாளுமன்றக் குழு உள்ளிட்ட சுமார் 20 நிறுவனங்களிடம் சமர்ப்பித்தது.

உபவேந்தர் இஸ்மாயிலுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுக்களில் அதிகமானவை, நிதி மோசடி தொடர்பானவையாகும்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு மண்டப நிர்மாணத்தில் முறைகேடு செய்தமை, மாணவர்களின் விடுகளுக்கான கட்டில்களுக்குரிய மெத்தை கொள்வனவில் மோசடி மேற்கொண்டமை, பல்கலைக்கழகத்தின் பெயரில் நாட்குறிப்பு (டயறி) அச்சிட்டதில் நிதி மோசடி செய்தமை, பல்கலைக்கழக நிதியில் உபவேந்தரின் சொந்த வீட்டை புனர்நிர்மாணம் செய்தமை, பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தை மண்ணிட்டு நிரப்புவதில் மோசடி செய்தமை மற்றும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்துக்கு பல்கலைக்கழக நிதியைப் பயன்படுத்தி பத்திரிகையில் விளம்பரம் செய்தமை என, உபவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், மேற்படி 220 பக்கங்களைக் கொண்ட முறைப்பாட்டு அறிக்கையில் உள்ளடங்கியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான 'கோப்' எனப்படும் பொது நிறுவனங்கள் மீதான நாடாளுமன்றக் குழு ஆராய்ந்து அறிக்கையொன்றினை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கைக்கு இணங்கவே, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தனிநபர் ஆணைக்குழுவொன்றினை அமைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.