பண்பை போதிக்கும் அறநெறி வகுப்புக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - மு.இராஜேஸ்வரன் மு.மா.உறுப்பினர்


கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இம்மாகாணத்தில் செயற்படும் இந்து அமைப்புக்களினதும், அரசியல் பிரமுகர்களினதும் கோரிக்கைக்கு செவிசாய்த்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் முற்பகல் வேளைகளில் அறநெறிப் பாடசாலைகள் இயக்கமுறும் வேளையில் தனியார் கல்வி நிலையங்கள் இயங்கக் கூடாதென கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ள போதிலும் ஒரு சில தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த உத்தரவினை மீறி செயற்படுகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சு முன்வர வேண்டும். இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது கோரிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அறிவுசார் கல்விக்கு நிகராக, பண்புசார் கல்வியை எமது சிறார்கள் பெறவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். ஒரு மனிதனிடம் எவ்வளவுதான் கல்வி ஞானம் இருந்தாலும் அவனிடம் நல்லொழுக்கப் பண்புகள் இல்லையாயின் அவன் பெற்ற கல்வி யாவும் பூச்சியமாகிவிடும்.  அவனை சமூகம் புறந்தள்ளி வைத்துவிடும்.

இந்ந வகையில் அறநெறிப் பாடசாலைகள் பண்பைப் போதிக்கின்றன. கெட்ட விடயங்கள் என்ன, நல்ல விடயங்கள் என்ன என்பன பற்றி இளம் சிறார்களுக்கு அழகுற போதிக்கின்றன. அத்துடன் தாய், தந்தையர், ஆசிரியர்கள், வயதில் மூத்தோர் போன்றோரில் அறிவுரைகளை ஏற்று நடப்பதற்கும் பயிற்சிளை அளிக்கின்றன. இறை இல்லங்களை நாடி கூட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு சமய விழுமியங்களை கடைப்பிடிக்க வழிகாட்டி நிற்கின்றன.

இவ்வாறு சமூகத்திற்குப் பொருத்தமான பணியினை மேற்கொள்ளும் அர்ப்பணிப்பாளர்களான அறநெறிப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் போன்றோரின் சேவையை நினைந்து தலைவணங்குகின்றேன். எனவே எமது கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தூய சமுதாயத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடும் அறநெறிப் பாடசாலைகளின் செயற்பாடுகளுக்கு கைகொடுத்து உதவ வேண்டும் என்று வினையமாக கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.