வாழைச்சேனையில் ஆலய உற்சவத்தின் போது இரு குழுக்களிடையே மோதல் ! பொலிசார் எடுத்த அதிரடி நடவடிக்கை !


வாழைச்சேனை பேத்தாழை மாவடிமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெற்று வரும் உற்சவ விழா வழிபாட்டில் கலந்து கொள்ளச் சென்ற இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்டோர் கல்குடா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்து பொலிசார் குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

புதன் கிழமையன்று மாலை (20) மேற்குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இருசாராரையும் பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

இதன்போது இருசாராரும் கலகத்தில் ஈடுபடாது ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருக்கவேண்டும் எனவும் ஆலய உற்சவத்தில் முரண்பாடுகளை மறந்து வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டதுடன் இருவரது பிணக்குகளும் சமாதானமாக தீர்த்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கடந்த ஞாயி;ற்றுக்கிழமையன்று  குறித்த ஆலயத்தில் வழிபாட்டில் கலந்து கொள்ள சென்ற இளைஞர்கள் மேல் ஆலயத்தில் கூடியிருந்த  சிலர் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

 இச்சம்பவத்தில் நான்கு பேர்கள் காயமடைந்ததாகவும் இருவர்  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியிருந்ததாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) மாலை ஆலய முன் வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.


குறித்த ஆலய முன் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் உள்ளே இருந்த பணம் காணமல் போயுள்ளதாக தெரிவித்து அவ்விடத்தில் நின்ற இளைஞர்கள் மீது சந்தேகம் கொண்டு சிலர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை இச்சம்பவத்தினை கேள்வியுற்ற பெற்றோர்கள் மற்றும் கருங்காலிச்சோலை கிராம மக்கள் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறும் வலியுறித்தி கலகத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற கலகத்தினை கட்டுப்படுத்தி வழமையான சூழ் நிலைக்கு கொண்டு வரும் முகமாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த  பொலிசார் கலகத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்ததையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பாக பூரண விசாரணைகளை மேற்கொள்வதுடன் குற்றவாழிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிசார் கலகத்தில் ஈடுபட்டோர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.