காத்தான்குடி நகர சபைத் தலைவருக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி !


காத்தான்குடி நகர அபிவிருத்திபற்றி விவரிவாகக் கலந்துரையாட ஜனாதிபதி மாளிகைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தனக்கு நேரடியாக அழைப்பு விடுத்ததாக காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி நகர அபிவிருத்தி மற்றும் அவசியமாகவும் அவசரமாகவும் செய்து முடிக்கப்பட வேண்டிய மக்களின் தேவைகள், மக்கள் முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதியின் பொலநறுவை வாசஸ்தலத்தில் வைத்து காத்தான்குடி நகர சபைத் தலைவரால் ஜனாதிபதியிடம்( திங்கட்கிழமை) நேரடியாகக் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியுடனான இச்சந்திப்பு குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த காத்தான்குடி நகரசபைத் தலைவர் , ”இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு 100 சதவீதம் வெற்றியீட்டிய ஒரேயொரு நகர சபை காத்தான்குடி என்கின்ற வகையில் தேர்தல் பிரச்சாரக் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்காக மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான நகர சபை நிருவாகத்திற்கு உண்டு.

தேர்தல் பிரச்சாரக் காலத்தின்போது காத்தான்குடிக்கு மூன்று முறை வருகை தந்திருந்த ஜனாதிபதியும் காத்தான்குடி நகர சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாகக் கைப்பற்றுமாயின் பாரிய அபிவிருத்திகளை அடைந்து கொள்ளும் வகையில் தாம் கரிசனை எடுப்பதாக வாக்குறுதியளித்திரந்தார். அதன்படி காத்தான்குடி நகர சபை தற்போது முழுமையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆளுகையின் கீழ் வந்துள்ளது.

அந்த வகையில் காத்தான்குடி நகர சபைப் பிரதேசத்தில் உள்ள முன்னுரிமைத் தேவைகள், நகர சபையில் நிலவும், சுமார் 200 பேருக்கு மேற்பட்ட ஆளணிப் பற்றாக்குறை, திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்திற்கான விஷேட பொறிமுறைகள் அடங்கிய செயற் திட்டம், டெங்கு ஒழிப்புக்கான வேலைத் திட்டம், சுகந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நகர சபை உறுப்பினர்களின் வட்டார அபிவிருத்திக்காக ஜனாதிபதியால் வாக்குறுதியளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பிரதேச அபிவிருத்தி குறித்த பல விடயங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட மஜரில் உட்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து கலந்துரையாடுவதற்கு தான் நேரம் ஒதுக்குவதாகவும் அதற்கேற்ப குறிக்கப்படும் தினத்தில் ஜனாதிபதி மாளிகைக்கு வருமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்” என நகர சபைத் தலைவர் அஸ்பர் தெரிவித்துள்ளார்.