பிரதி அமைச்சர் ஹரீசின் முயற்சியினால் வயல் பிரதேசங்களை இணைக்கும் வகையில் இரண்டாம் கோஸ்வே வீதிக்கு புதிய பாலம்


(அகமட் எஸ். முகைடீன்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கிராமிய பாலங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் கல்முனை மேற்கு வயல் பிரதேசங்களை இணைக்கும் வகையில் இரண்டாம் கோஸ்வே வீதிக்கு புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது.

அதற்கமைவாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆர். சத்தியநாதன் இன்று (19) செவ்வாய்க்கிழமை குறித்த பாலம் அமையவுள்ள பிரதேசத்திற்குச் சென்று பார்வையிட்டு மதிப்பீடுகளை மேற்கொண்டார்.

இதன்போது அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சத்தார், நௌபர் ஏ. பாவா மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி அன்புமுகைதீன் றோஷன், தொழில் அதிபர் எச்.எம்.எம். அமீர் அலி, பண்டித் தீவு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.எச்.எம். சித்தீக், இறைவெளிக் கண்ட வட்ட விதான உதுமாலெப்பை ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்.

பண்டித் தீவு மேல் கண்டம், பண்டித் தீவு கிழல் கண்டம், இறைவெளிக் கண்டம், கல்முனைக் கண்டம், குடாக்கரை கிழல் கண்டம், குடாக்கரை மேல் கண்டம், சேகுப் பத்து கண்டம், நற்பிட்டிமுனை முனையாறு கண்டம் ஆகிய வயல் பிரதேசங்களை இணைக்கும் வகையில் மேற்படி பாலம் அமைக்கப்படவுள்ளது.

குறித்த வயல் பிரதேசங்களில் 5000 ஏக்கருக்கு அதிகமான வயல்காணிகள் காணப்படுகின்றன. இக்காணிகளுக்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் இரண்டாம் கோஸ்வே வீதியில் பாலம் அமைக்கப்படாமையினால் நெற்செய்கையினை மேற்கொள்வதற்காக மாவடிப்பள்ளி ஊடாக 15 கிலோ மீற்றருக்கு மேல் பயணித்து தமது வயற் காணிகளை சென்றடைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. எனவே இரண்டாம் கோஸ்வே வீதிப் பாலத்தை அமைப்பதன் மூலம் 1½ கிலோமீற்றர் தூரம் பயணித்து அக்காணிகளைச் சென்றடையக் கூடியதாக அமையவுள்ளது.

எனவே குறித்த வீதிக்கு பாலத்தை அமைப்பதன் மூலம் கல்முனை. நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் குறைந்த போக்குவரத்துச் செலவில் தமது நெற்செய்கைகளை மேற்கொள்ள கூடியதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.