பா.உறுப்பினர் ஸ்ரீநேசன் முயற்சியால் விவசாயிகளின் வேண்டுகோளிற்கிணங்க வெட்டப்பட்டது முகத்துவாரம்


(மயூ.ஆ.மலை)       
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் உயர்ந்ததால், கடந்த இரு வாரமாக  அதிகமான நெல் வயல்கள் நீரில் மூழ்கிக்கிடந்தன. இதனால் கவலையடைந்த விவசாயிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களை தொடர்பு கொண்டு வாவி கடலோடு சங்கமிக்கும் முகத்துவாரத்தினை திறந்து வாவியின் நீர் மட்டத்தை குறைப்பதன் மூலம் தமது நெல் வயல்களை காப்பாற்றுமாறு கேட்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் உரிய அதிகாரிகளை மாவட்ட செயலாளருக்கும் அறிவித்ததோடு, அவர்களையும் மீனவர்கள், விவசாய பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு பல தடவைகள் சென்று முகத்துவாரத்தை வெட்டித்திறப்பதற்கான சாத்தியம்  தொடர்பாக ஆராய்ந்தார். எனினும் கடல் நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டமையினால் இது சாத்தியப்படவில்லை

எனினும் இன்று கடல் நீர் மட்டம், வாவிநீர் மட்டத்தை விட தாழ்ந்து காணப்பட்டமையினால் மேலதிக அரசாங்க அதிபர், வீதி  அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், மாநகர சபை மேயர், பிரதேச செயலாளர், மீனவ பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளின் முன்னிலையில் இயந்திர, உபகரணங்களின் உதவியோடு முகத்துவாரம் வெட்டி திறக்கப்பட்டு வாவி நீர் கடலினுள் ஓட வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

அவ்விடத்திற்கு பிரதி அமைச்சர் செய்யத் அலிசாகீர் மௌலானா அவர்களும் வருகை தந்திருந்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியினால் முகத்துவாரம் வெட்டப்பட்டமையினால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகளும், மீனவ பிரதிநிதிகளும் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.