காரைதீவு பிரதேசசபையில் எதிரும் புதிருமான கருத்துக்களால் ஏற்பட்ட விவாதம்!


(காரைதீவு  நிருபர் சகா)
எமது பிரதேசத்துள் மக்கள் விரும்பாத எந்தத்திட்டத்தையும் அமுல்படுத்த அனுமதிக்கமாட்டேன். உறுப்பினர்கள் அதையிட்டு கவலைப்படத்தேவையில்லை. இவ்வாறு காரைதீவுப்பிரதேசசபையின் 4வது அமர்வில் உரையாற்றிய பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேசசபையின் 4வது மாதாந்த அமர்வு  (11) திங்கட்கிழமை காரைதீவு பிரதேசசபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த 4வது சபை அமர்வில் கடந்த மாத வரவுசெலவு திட்டம் உள்ளிட்ட பல முன்மொழிவுகள் விவாதத்துக்கு எடுத்து கொள்ள பட்டது.

ஆரம்பத்தில் வரவு செலவு திட்டம் தொடர்பாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளபட்ட போது உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் இந்த வரவுசெலவு திட்டம் சபை கூடுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் எங்களுக்கு சமர்ப்பிக்க பட்டிருக்கவேண்டும் எனவே அடுத்தமாத அமர்வில் இதனை விவாதத்திற்கெடுத்து நிறைவேற்றலாம் என்று கூறினார்.

சில உறுப்பினர்கள் அதே கருத்துக்களை கூறி எங்களால் இந்த வரவுசெலவு திட்டத்தை நிறைவேற்ற விருப்பம் எல்லை என கூறினர்.
இந்த பிரேரணைக்கு ஆதரவாக இருவரும் எதிராக 9பேரும் வாக்களித்ததனால் நிதி அறிக்கை தொடர்பான பிரேரணை அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் பேசுகையில்:
இதுவரை நான் அதிகாரத்தை கையிலெடுக்காமல் அனைத்திற்கும் உறுப்பினர்களது கருத்தைப்பெற்றே செயற்படுத்திவந்தேன். அதன்விளைவுதான் இன்றைய விவாதம். எனவே நீங்களே அதிகாரத்தை கையிலெடுக்கும்படி கூறியுள்ளீர்கள். இனி அது நடக்கும்.
விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி.அது தலைவரின் தாரகமந்திரம். நான் மெழுகுதிரிபோல் உருகி மக்களுக்காக சேவைசெய்துகொண்டுவருகின்றேன். என்றார்.

சு.கட்சி உறுப்பினர் மு.காண்டீபன் உரையாற்றுகையில்:
சர்ச்சைக்குரிய பிரதானவீதி வடிகான் அமைப்புவேலையை உடனடியாக நிறுத்தவேண்டும். வடிகான் நீரை வயலுக்குள் அல்லது தனியார் காணிக்குள் இறக்கலாமா? முழுவயல் நிலமும் பாதிக்கப்படும். எமது எல்லைக்குள் எம்மிடம் கேளாமல் எமது மக்கள் நலனைப்பாதிக்கக்கூடிய வடிகானை அமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இத்திட்டத்தை அவர்கள் நிறுத்தாவிடில் நாம் பொது மக்களைத்திரட்டி ஆர்ப்பாட்டத்திலீடுபடுவோம் என்றார்.

பதலளித்த தவிசாளர் மக்கள்நலனுக்கு எதிராக யாரும் செயற்படமுடியாது. குறித்த வடிகான் பிரதேசசபை உறுப்பினர் ச.நேசராசா நாளை கடிதம் வழங்கும்பட்சத்தில் அத்திட்டத்தை நிறுத்தமுடியும் என்றார்.

சுயேச்சை உறுப்பினர் ஆ.பூபாலரெத்தினம் உரையாற்றுகையில்:
காரைதீவுப்பிரதேசத்திலுள்ள வயல்காணிகளை இரண்டு கமநல உத்தியோகத்தர்கள் பரிபாலிக்கமுடியாது. எனவே குறித்த காணிகளை தற்காலிகமாக இணைந்திருக்கின்ற சாய்ந்தமருதுப் பிரிவிலிருந்து எடுத்து காரைதீவு கமநல உத்தியோகத்தர்பிரிவுக்குள் கொண்டுவரப்படவேண்டும் என்றார்.

நீண்டகாலமாக சபைக்கு வருமானத்தைதரும் வரிகள் அதிகரிக்கப்படவில்லை. எனவே ஏனைய சபைகளைப்போல் இல்லாவிடிடினும் ஓரளவுக்காவது நாம் அதனை உயர்த்தினால்தான் மக்களுக்கான சேவைகளை மேலும் செய்யமுடியும் என்றார். தவிசாளர்.
இச்சபை அமர்வில் சபைவருமானம்கருதி அனுமதி அளிக்க பட்ட பிரேரணைகளாவன -;

உடனடியாக உழவு இயந்திரம் திருத்துவதற்கு அனுமதியளித்தது.மீன் கடை மற்றும் கோழிக்கடைக்கான அறவிடப்படுகின்ற கட்டணம் 25வீதம்  உயர்த்துவதற்கு சபை அனுமதியளித்தது.
மாட்டிறைச்சிக்கடை ஒன்றிக்கான அறவிடப்படுகின்ற நாளாந்த கட்டணம்(ஒரு மாடு அறுப்பிற்காக) 50 ரூபாவாக உயர்த்துவதற்கு சபை அனுமதியளித்தது.
பிரதேச சபை உழவு இயந்திரம் ஒன்று திருத்தி பாவனைக்கு எடுப்பதற்கு சபை அனுமதியளித்தது
தெருக்கோட்டுச்சான்றிதழுக்கான கட்டணத்தை இருமடங்காக அதிகரிப்பதற்கு சபை அனுமதியளித்தது.

த.தே.கூ.உறுப்பினர் சபாபதி நேசராஜா உரையாற்றுகையில் வடிகான்  தொடர்பாக நாம் சம்பந்தப்பட்ட(RDA) பொறியியலாளரிடம் ஏதிர்காலத்தில் இவ் வடிகானால் ஏற்பட போகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆனால் அவர் எமது பேச்சுக்கு உடன் படவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கு சம்பந்தப்பட்ட பொறியியலாளர் மதிப்பளிக்கவில்லை என்றார்.

இறைச்சிக்கடை ஏயாட்டல் கோபுர நிர்மானம் தொடர்பாக அதிக நேரம் சபை உறுப்பினர்களிடையே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சகல 11 உறுப்பினர்களும் தமது கருத்துக்களை சபையில் தெரிவித்தனர்.

சபை அமர்வில் உரையாற்றிய தவிசாளர் ஜெயசிறில் அவர்கள் தான் ஒரு இனத்துக்கு சார்பானவர் என ஒரு சிலர் முக நூலின் ஊடாக விமர்சிப்பதாகவும் தாம் எல்லா விடையங்களையும் சபையில் கொண்டுவந்து அனுமதிபெற்ற பின்னரே நடைமுறைப்படுத்துவதாகவும் தான் எப்போதும் மக்களின் நலனுக்காக முன் நின்று செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.மேலும் இக் கூட்டமானது திடீர் என கூட்டப்பட்டமையால் நிதி அறிக்கையை உறுப்பினர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியாது போனதாகவும் தவிசாளர் குறிபிட்டார்.
சு.கட்சி உறுப்பினர்கள் இருவரும் 20வீதிகளைக் கொண்டுவந்துள்ளதாகத்தெரிவித்தனர்.