கிழக்கு மாகாணம் உட்பட அடுத்த சில நாட்களுக்கு மக்கள் அவதானம் !


நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் இன்று(30) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சிறிதளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இடி மின்னலால் ஏற்படும் தாக்கங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுள்ளது.

இதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு கடற்பரப்பில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று, மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.