வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் !


,ஒலுவில் அஸ்ரப் நகர் பிரதான வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் பாரியளவில் வீதி சேதமடைந்துள்ளதாக கூறி அப்பிரதேச மக்கள் கவனயீர்ப்ப போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.

குறித்த வீதி சேதமடைந்துள்ளமையால் இவ்வீதியூடாக பயணிக்கும் விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களால் சுட்டிக்காட்டப்பட்டன.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை பிரதேசபை உறுப்பினர் ஏ.எம். ஹம்சா கருத்து தெரிவிக்கையில்,

“அண்மைக்காலமாக இவ்வீதியினூடாக அதிகளவில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் வீதி குன்றும் குழியுமாகியுள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடுகளையும் எதிர் நோக்கியுள்ளதுடன் பாடசாலைக்குச் செல்லுகின்ற மாணவர்களும் சீருடைகளில் புளுதி படிந்த நிலைமையில் வீடு திரும்புகின்ற நிலைமைக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆகையால் இதற்கான தீர்வினை அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரும், பிரதேச செயலாளரும் பெற்றுத்தர வேண்டும்” என வேண்டுகோள் ஒன்றினையும் முன்வைத்தார்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பதாதைகளை ஏந்தி கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.