மட்டக்களப்பில் பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறை அதிகரிப்பால் இவ்வாண்டு அதிக முறைப்பாடுகள் பதிவு - அரசாங்க அதிபர்


பெண்கள் சிறுவர்கள் தொடர்பில் 2017இல் 2324 முறைப்பாடுகளும் 2018 இல் இவரையில் 1048 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இது அதிகமான எண்ணிக்கையாகும். எனவே இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்திப் பணியாற்ற வேண்டிய தேவை உருவாகியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின்  அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற, பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கெதிரான பிரதிபலிப்பும் தடுத்தலும் தொடர்புப் பொறிமுறையின் செயற்படுத்தல் தொடர்பான கூட்டத்தில் தலைமையுரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,

சிறுவர்களும் பெண்களும் பாதுகாப்பற்ற வகுப்பினராக இந்த மாவட்டத்தில் மாத்திரமல்ல இலங்கையிலே இனங்காணப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் தான் அரசாங்கம் பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான போதிய பாதுகாப்பினையும் அது தொடர்பான ஆதரவினையும் வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அந்த அடிப்படையில் இங்கே இருக்கின்ற உத்தியோகத்தரகள் பிரதேச செயலாளர்கள், அதே போன்று பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் இவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றார்கள். இருந்தாலும் 2017ஆம் ஆண்டு 2324 பெண்கள் சிறுவர் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதே போல 2018 ல் இவரையில் 1048 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அந்த அடிப்படையில் பார்த்தால் மிகக் கூடுதலாக வன்முறைகள் பதிவாகியிருப்பதனைக் காணமுடிகிறது. வேறு வேறு வகையான வன்முறைகளாகக் காணப்பட்டாலும் கூட அது தொடர்பாக கூடுதலான கவனம் எடுத்து அவற்றினைச் செயற்படுத்த வேண்டிய தேவை எங்கள் மத்தியில் சுமத்தப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

எனவே இந்த நிலையில் எங்களுடைய மாவட்டத்தில் பெண்கள் சிறுவர் தொடர்பான கூடுதலான கவனத்தினை எடுத்துச் செயற்பட வெண்டிய நிலையில் இருக்கிறோம்.

இக் கலந்துரையாடலில் மாவட்டத்தில் இருக்கின்ற பெண்கள் சிறுவர் தொடர்பான பிரச்சினைகளை இனங்காண்பதுடன், அவற்றுக்கான தீர்வினைக் காண்பதில் முக்கியப்படுத்திக் கலந்துரையாடி திட்டமிட்ட அடிப்படையில் எவ்வாறான வன்முறைகள், ஆபத்தான் நிலையில் இருந்து மீட்டெடுப்பதற்கான திட்டங்களைத் தயாரித்து வெற்றிகரமாக அமைக்க வேண்டும்.

அமைச்சின் செயலாளர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் சிறுவர் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினார். அத்துடன், மாவட்டத்திலிருக்கின்ற மிகவும் வறிய நிலையில் உள்ள கிராமம் ஒன்றினை இனங்கண்டு திட்டம் ஒன்றினைச் செயற்படுத்துவதற்கு உடன் பட்டிருக்கிறார். அதன் மூலம் முன்னேற்றகரமான நிலையொன்றினை உருவாக்க முடியும் என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவெஸ்வரனின் வழிப்படுத்தலில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், பெண்கள் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி அசோக அலவத்த,  மட்டக்களப்பு பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப்பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி நாகமணி சுசிலா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் பால்நிலை மற்றும் பெண்கள் தொடர்பான விசேட தொழில் நுட்ப நிபுணர் பிமாலி அமரசேகர, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோரும் பங்கு கொண்டனர்.

பிரதேச செயலாளர்கள், மாவட்ட ரீதியில் பணியாற்றிவரும் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனத்தினர் எனப்பலரும் இதில் கலந்து கொண்டனர்.