பிரதேச அபிவிருத்தியில் பிரதேச சபைகளும் பிரதேச செயலகங்களும் இணைந்து செயற்பட வேண்டும் கிழக்கு மாகாண பிரதம செலாளர்






(சிவம்)

பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதாயின் அந்தந்தப் பிரதேச செயலகங்களும் பிரதேச சபைகளும் இணைந்து திட்டங்களைத் தயாரித்து ஒருங்கிணைந்து செயல்படுத்தினாலேயொழிய அபிவிருத்தியைக் காண முடியாது என கிழக்கு மாகாண பிரதம செலாளர் டி.எம்.எஸ். அபயகுணவர்தன தெரிவித்தார்.


கிழக்கு மாகாணத்தில் சிவில் சமூகத்தின் பங்களிப்புடன் சமூக ஆளுகையை வலுவூட்டுவதற்கான கொள்கைப் பரிந்துரைகள் “Strengthening Policy & Action through Citizens’ Engagement” (SPACE) in the Eastern Province) எனும் தொனிப் பொருளியில் இடம்பெற்ற செயற்பாட்டு நிகழ்வில் அவர்; உரையாற்றினார்.

ஜனதாக்ஸன் மற்றும் கெயார் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் ஆகியவை இணைந்து கிழக்கு மாகாணத்திலும் இலங்கையின் ஏனைய மகாணங்களிலும் அமுல்படுத்தியுள்ள இந்தத் திட்டத்தின் வெளிப்படுத்துகை நிகழ்வு 19.06.2018 சர்வோதய மட்டக்களப்பு மாவட்டப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள், உள்ளுராட்சி ஆணையாளர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், உட்பட சுமார் 60 அதிகாரிகளும், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






அங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண பிரதம செலாளர் டி.எம்.எஸ். அபயகுணவர்தன. மேலும் கூறியதாவது,






பிரதேச சபைகளிலும், பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் அத்தனை அதிகாரிகளும் அந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காகவே பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்கள்.






ஆகையினால், இவ்விரு அரச அலுவலகங்களிலும் கடமை புரியும் அதிகாரிகள் அந்தந்தப் பிரதேச மக்களின் தேவைகள், பிரச்சினைகள் மற்றும் தீர்வுகளை முன்னிலைப்படுத்தியதாக ஒருங்கிணைந்த திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும்.






அந்த வகையில் ஜனதாக்ஸன் நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் பட்டிப்பளை, வெல்லாவெளி பிரதேச செயலகங்களும் கொக்கட்டிச்சோலை, போரதீவுப்பற்று பிரதேச சபைகளும் இணைந்து அபிவிருத்திக்கான ஒருங்கிணைந்த திட்டங்களை சிவில் சமூகங்களின் முழுப் பங்களிப்புடன் தயாரித்துள்ளார்கள்.






என்னைப் பொறுத்தவரையில் இவ்விரு அரச அலுவலஙக்ளும் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்துள்ளது வரலாற்றில் இதுவே முதற் தடவை என நினைக்கின்றேன்.






எனவே, எதிர்காலத்தில் ஏனைய பிரதேச சபைகளும் பிரதேச செயலகங்களும் இவ்வாறு ஒருங்கிணைந்த பிரதேச அபிவருத்திக்கான திட்டங்களைத் தீட்டி ஒருங்கிணைந்த முறையில் அவற்றை அமுல்டிடுத்துகின்ற பொழுது வெற்றியை அடைந்து கொள்ள முடியும்' என்றார்.






ஓக் நிறுவனத்தினால் நிதியளிக்கப்பட்டு ஜனதாக்ஸன் மற்றும் சர்வதேச கெயார் நிறுவனங்களினால் இத்திட்டம் அமுலாக்கம் செய்யப்பட்டு வருகின்றது.






ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை குறிப்பாக இலகுவில் பாதிக்கப்படக் கூடிய தரப்பினரான பெண்கள் மற்றும் இலங்கையிலுள்ள இளையோர் சமுதாயத்தையும் இலக்காகக் கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.






ஆளுகையில் அவர்களது செயற்பாட்டுடனான பங்களிப்பைப் பெறவும் அபிவிருத்தியில் முன்னுரிமைகளைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெறவும், தீர்வுகளை வரையறை செய்யவும், அவர்களது தேவைகளையும் முன்னுரிமைகளையும் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி நிறைவேற்றக் கூடிய திட்டமிடலைப் பெறுவதற்கும் இந்தத் திட்டம் துணை புரியும்.






இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணச் சபை செயலாளர் யூ.எல். அப்துல் அஸீஸ், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. முருகானந்தன், கிழக்கு மாகாண திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளர் என். தமிழ்ச் செல்வன், ஜனதாக்ஸன் நிறுவனத்தின் சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரி ரங்கபல்லாவல, அந் நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன், நிகழ்ச்சி அலுவலர் மேனகா ஜயசேகர, மற்றும் திட்ட அலுவலர்களான ஜானக ஹேமதிலக, பாஸ்கரன் ஆகியோருட்பட இன்னும் பல அதிகாரிகளும் துறை சார்ந்த நிபுணர்களும் கலந்து கொண்டனர்.






இலங்கையிலும் மற்றும் ஒட்டு மொத்த சூழலிலும் நீடித்து நிலைக்கும் பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவதற்காக ஜனதாக்ஸன் நிறுவனம் 2011 ஆம் ஆண்டிலிருந்து தோதான திட்டங்களை அமுலாக்கம் செய்து வருவதாக ஜனதாக்ஸன் நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.