போதைப்பொருள் விற்பனையில் பாடசாலை மாணவர்கள் - பொலிஸ் பொறுப்பதிகாரி சமனகுமார

போதைப்பொருள் விற்பனையில் பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்துவதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமனகுமார தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஸ்ரீஇராமகிருஸ்ணா கல்லூரி மாணவர்களுக்கான வீதிப்போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (4)காலை நடைபெற்றது.

மாணவர்களுக்கு வீதிப்போக்குவரத்து, போதைப்பொருள் பாவனை, பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமனகுமார வருகை தந்திருந்ததுடன், இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, “தற்போதைய காலகட்டத்தில் உலக நாடுகள் முழுவதும் மிக வேகமாக பரவிவரும் ஒரு பொருளாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது.

அதனடிப்படையில் இலங்கையிலும் போதைப்பொருள் பாவனை மாணவர் சமூகத்தினை மையப்படுத்தியதாக அமைந்திருப்பது அவர்களது எதிர்காலத்தினை பாதிக்கும் ஒரு விடயமாகவே பார்க்கவேண்டியிருக்கின்றது.

போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களே அது தொடர்பான வியாபாரத்தில் ஈடுபடுவதனையும் அவதானிக்க முடிகின்றது. தற்போதைய காலகட்டத்தினை பொறுத்த வரையில் மாணவர்கள் மத்தியில் துஸ்பிரயோகம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுவதுடன், அவ்வாறான துஸ்பிரயோகங்களும் நடந்தேறியிருக்கின்றது.

பாடசாலை சிறுவர்கள் மத்தியில் பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுமாக இருந்தால் அது தொடர்பாக உங்களுக்கு மிக நம்பிக்கையான நண்பர்களிடம் அல்லது அயல் வீட்டார்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் முறையிடுங்கள்.

அதற்கும் மேலாக பொலிஸ் நிலையத்தில் அதற்கான பிரிவு இயங்கி வருகின்றது அங்கு சென்றும் இவை தொடர்பான முறைப்பாடுகளைச் செய்யமுடியும்.

மாணவப் பருவம் என்பது மிகவும் முக்கியமானதொன்று. அந்தப்பருவத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு நல்ல முறையில் பயன்படுத்தினால் அனைவரது எதிர்காலமும் சுபீட்சம் உள்ளதாக அமையும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இருந்து வருகைதந்த போக்குவரத்துப் பொலிஸாரினால் உயர்தர மாணவர்களுக்கான வீதிப்போக்குவரத்து தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.