அக்கரைப்பற்றில் முஸ்லிம்கள் மீது தாக்குதலால் தவிசாளர் கைது : மக்கள் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டத்தால் பதற்றம்

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பகுதியில் சட்டவிரோத முறையில் நில ஆக்கிரப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக மக்களிடத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் முஸ்லிம்கள் சிலர் போலி ஆவணங்களுடன் சென்று அத்துமீறி நிலங்களை அபகரிக்க முற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பாக ஆலையடிவேம்பு தவிசாளர் பேரின்பராஜா கைது செய்யப்பட்டமையினால் மக்கள் மத்தியில் பதற்ற நிலைமை அதிகரித்துள்ளது.

இதனால் அவரின் விடுதலையை கோரும் விதமாக பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன் பெரும்பாலான அரச ஊழியர்களும் பணிக்குச் செல்லவில்லையென கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தவிசாளர் பேரின்பராஜாவை நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைக்கு அழைத்து பின்னர் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த பிரதேசங்களில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

இதேவேளை அம்பாறை, ஆலையடிவேம்பு களப்பு நிலத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து நிறுத்த சென்ற பொதுமக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசசபை பெண் உறுப்பினர்கள் இருவருரையும் கடந்த செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.