செங்கலடி பெரிய புல்லுமலையில் அமைக்கப்படும் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.


- செங்கலடி சுபா - கிருஷ்ணராஜா 
ஏறாவூர்ப்பற்று பிரதேச செங்கலடி செயலகத்திற்குட்பட்ட பெரிய புல்லுலை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் உற்பத்தி தொழிற்சாலைக்கு  எதிராக அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று திங்கட்கிழமை காலை  வீதியினை மறித்து மக்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டது.

 குடிநீர் உற்பத்தி தொழிற்சாலையினை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்கான எந்த அனுமதியும் உரிய முறையில் பெறாமலும் பிரதேச மக்களின் கருத்துகள் பெறப்படாமலும் இந்த தொழிற்சாலை அமைக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இயற்கை வளம் மிக்க பகுதிகளில் இவ்வாறான தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது இயற்கை வளத்தினை பாதிக்கும் எனவும் இதனை உடனடியாக இடைநிறுத்தவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த கட்டிடம் அமைப்பதற்கு ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் சபையின் அனுமதியின்றி அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் ஒருவரே இந்த தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாகவும் தமது பகுதிகளில் இவ்வாறான நடவடிக்கைகளை தாம் ஓருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குவந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எஸ்.வியாழேந்திரன்இஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளா என்.வில்வரெட்னம் ஆகியோர் மக்களுடன் கலந்துரையாடினர்.

சம்பவ இடத்தில் செங்கலடி  பிரதேசசபை செயலாளர் கட்டிட அனுமதி வழங்கியமை தொடர்பில் குழப்பநிலையும் ஏற்பட்டது.