மாற்று இனத்துக்கு முதலமைச்சர் பதவி போகுமேயானால் அதற்கு த.தே. கூட்டமைப்பே பொறுப்பு ! இங்குள்ளவர்கள் பயத்தில் உண்மை பேசாதவர்கள் !


கிழக்கு மாகாண சபையினை தமிழர்கள் அல்லாதவர்கள் கைப்பற்றினால் அதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைகின்றது. இதனால் வடக்கு மாகாணசபைக்கு அடுத்த முதலமைச்சர் யார் என்று தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பேசப்படுகின்றது.

ஆனால் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டது. எனினும், கிழக்கின் அடுத்த முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை எந்த தீர்மானத்தினையும் எடுக்கவில்லை.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள சிலர் உண்மைகளை பேசுவதே குறைவு. சிலருக்கு பேசுவதற்கு அச்சம். நான் அதைபற்றி சிந்திக்கவில்லை. வடக்கு மாகாணத்தில் யார் எதனைச் செய்தாலும் அங்கு தமிழர்கள்தான் நிலைநிறுத்தப்படுவார்கள்.

ஆனால் கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் அவ்வாறில்லை. இங்கு மிகவும் கவனமாகவும் விழிப்பாகவும் செயற்படவேண்டிய நிலையுள்ளது. இல்லையென்றால் கிழக்கு மாகாணத்தினை தமிழர்கள் ஆளுகின்ற அதிகாரத்தினை இழக்கின்ற நிலைமை ஏற்படும்.

இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற அங்கத்துவ தலைமைத்துவங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவமும் உடனடியாக கூடி, கிழக்கு மாகாணத்திற்குரிய அடுத்த முதலமைச்சர் வேட்பாளர், கிழக்கு மாகாணசபை வேட்பாளர்கள் யார் என்பதை உடனடியாக அறிவிக்கவேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி, ஐக்கிய தேசிய கட்சி போன்ற தேசிய கட்சிகளும் மட்டக்களப்பு-அம்பாறை பகுதிகளுக்கு சென்று தற்போதே மாகாணசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இதனை உணர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.