பயனாளிகளுக்குக் கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு...


ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் முயற்சியினால் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி, செங்கலடி மற்றும் இலுப்படிச்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 50 பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்று (29) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.முரளிதரன், கே.சர்வானந்தன் உட்பட கட்சி பிரதேச கிளையின் உறுப்பினர்கள், கால்நடை வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், பயனாளிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சித்தாண்டி பிரதேசத்தில் 14 பயனாளிகளுக்கும், செங்கலடி பிரதேசத்தில் 11 பயனாளிகளுக்கும், இலுப்படிச்சேனை பிரதேசத்தில் 25 பயனாளிகளுக்கும் மானிய அடிப்படையில் இக்கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன. கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் முயற்சியினால் கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.