எச்சரிக்கை விடுத்தார் அஞ்சல்மா அதிபர் ! இன்று சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் விலக்கப்படுவர் !


இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காத அஞ்சல் சேவையாளர்கள், சேவையிலிருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என அஞ்சல்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அனைத்து பணியாளர்களதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலே இந்த அறிவிப்பு விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய சேவைக்கு சமூகமளிக்காத தற்காலிக, பணிசாரா, பதில் மற்றும் நிரந்தரமற்ற சேவையாளர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பில் நிர்வாகம் பொறுப்பேற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடளாவிய ரீதியாகவுள்ள அஞ்சல் அலுவலங்களின் கடமைகளை மேற்கொள்ள தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு அந்தந்த அஞ்சலங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக அந்தந்த பகுதியிலுள்ள காவற்துறையின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்றும், அது குறித்து காவற்துறைமா அதிபரை தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் பணிப்புறக்கணிப்பு இன்று 9வது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

அஞ்சல் சேவையாளர்களது பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடளாவிய ரீதியாக அஞ்சல் பரிமாற்று சேவை ஸ்தம்பித்துள்ளது.

மத்திய அஞ்சல் பரிமாற்றகம் உட்பட நாடளாவிய ரீதியாக உள்ள அஞ்சலகங்களில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.